பகல் முடியும் வேளை
அயர்ந்து போயிற்று
இன்னொரு நாள்...

நெஞ்சுக்குழியில் சிக்கியதை இளக்க
இளஞ்சூட்டு பானம் வேண்டும்.
அழைத்தது அவசர
உணவகத்தின் ஓட்டுப்பாதை.

கண்ணாடியின் பிரதிபலிப்பில்
எதேச்சையாய் பட்டது என் பார்வை.
அழகிய பிம்பம்
பழகிய முகம்!

புதிதாய் பார்ப்பது போல்
பிரமிப்படைகிறேன்.
இல்லை...
பூர்வ ஜென்மத்தில் இருந்தே
நன்கறிந்த முகம்.
உணர்வில்லை...
நினைவிழந்தேனோ?
உற்றுப் பார்க்கிறேன்
எனக்குத் தெரியும்
இது இப்போது கண்ட முகம்
கண்ணுக்குள் வாழ்ந்தது.
பார்க்கிறாளே பாவம் என்று
கருணைப் புன்னகை வீசியொரு
வரம் தந்தது முகம்.

நகர இயலவில்லை
வரிசை கூடிப் போனது
மெல்ல ஊர்ந்து
முன்னேறினேன்.
இதோ பாதை பிரிகின்றது.
சட்டென்று என் முகம்
எதிர்திசையில் மறைந்து விட
உள்ளுக்குள் கதறுகிறேன்
முகமிழந்துவிட்டேன்.
காண வேண்டும்...
மீண்டும் என் முகம்.


கற்பகம் இளங்கோவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It