இரண்டு வாரங்கழித்துச்
சந்திப்பதாகத் தேதி சொல்லிவிட்டுப்
போன உன்னிடம்,
என்ன பேசுவதெனத் தெரியவில்லை
எதிர்பாராத வேளையில்
நீ எதிர்ப்படும்போது !


சில நேரங்களில்,
கடற்கரையில் அமர வைத்துக்கொண்டு
நீ சொல்லிக்கொண்டே
போவதையெல்லாம் என்னால்
கேட்க முடிவதேயில்லை.
நீ சொல்லாமல் மறைப்பவைகளைப் பற்றி
நினைத்துக் கொண்டிருப்பதால்


நீ எழுந்து போகவும்
நான் எழுந்து போகவுமாக
நமக்குள் சண்டைகள் வருவதால்
எந்நாளும் வராது
நாம் எழுந்து போவதற்கான
சண்டை.

உன் பொருட்டு நானும்
என் பொருட்டு நீயும்
அலங்கரித்துக் கொள்வதை
நிறுத்திக் கொண்ட நிமிடத்தில்
தொடங்கியது ,
நம்மிருவருக்குமான நட்பு


உன்னை நினைத்து
நான் எழுதத் தொடங்கும் எதுவும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக
எவரோ , எவருக்கோ
எழுதிவிட்டது போன்ற
அலுப்பு தட்டும்போது,
அருகில் இல்லாமல்
போய்விடுகிறாய் நீ.

அரை மணி நேரம்
முன்னதாகப் புறப்பட்டு
கால் மணி நேரம்
தாமதமாகவே வா என
நான் நூறு முறை சொன்னதை
ஒரு முறையாவது கேட்கலாமல்லவா
ஒவ்வொரு முறையும்
மூச்சிறைக்க ஒடிவரும் நீ !

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It