நல்லதாய்க் கவிதை தீட்டும் நங்கை,என் தங்கை ஓர்நாள்
அல்லல்வாய்ப் பட்டாள்: ‘யாப்பை அறிகிலா ரும்,வெண் பாவைச்
சொல்லரும் இலக்க ணத்தாற் சுவைபடப் புனைகி லாரும்
கல்வியில் கவிஞர்!’ என்(று)ஓர் கவிசொலக் கனன்(று) எழுந்தாள்!

‘யாரிதைச் சொல்வ(து)?’ என்றாள்: ‘யான்புனை வரிகள் யாவும்
காரிடைத் துளிகள்! யாப்புக் கடிவாளம் பூட்ட வொண்ணாப்
போரிடைப் புரவி!’ என்று பொங்கினாள்: அன்னாட்(கு) யாப்பின்
நேரிடைத் தேவை கூறி நிகழ்த்திய விருத்தம் காண்மின்!!..

“யாப்பறி யாதே பாக்கள் யாப்பது தவறன்(று) என்று
தீர்ப்பிடும் கவிதை மாதே! தேர்ந்தநூல் படைத்தோ ரெல்லாம்
ஆர்ப்புறு கடலாய்ப் பாக்கள் அழகுறத் தந்த பாங்கு
யாப்பினால் வந்த தம்மா! யார்இதை மறுப்ப தம்மா?

இலக்கணம் என்பதோ நம் இசைத்தமிழ்த் தாளம் அன்றோ?
இலக்(கு)இலாப் புலவன் கூட இணங்கிடும் வேதம் அன்றோ?
கிழக்கிலே உதிக்கும் நாளைத் தெற்கிலும் உதிக்கச் சொல்லல்
வழக்கிலே நடக்கா தம்மா! வரையறை கவிதை யம்மா!

வரையறைக் குள்ளே வந்தால் வாழ்க்கையே கவிதை யாகும்:
வரையறைப் பட்ட பின்தான் வார்த்தைகள் கவிதை யாகும்!
வரையறை அறிந்தவன் பால் ‘வந்தது போல் பா(டு)!’ என்றால்
வரையறை நிலைக்கா தம்மா! வண்டமிழ் பிழைக்கா தம்மா!

பாட்டுடை மொழியென் றேதான் பைந்தமிழ் போற்று கின்றார்:
நாட்டிய பாட்டில், தாள நடைகளின் வரிசை இன்றேல்
கேட்டிட விரும்பு வாரோ? கிஞ்சித்தும் மயங்கு வாரோ?
ஏட்டுடைச் சொல்லே(து) அம்மா, இலக்கணம் இல்லா(து) அம்மா?

எண்ணமே சொல்லாய் வந்து இனித்திட வேண்டு மென்றால்
வண்ணமாய் வகுத்த யாப்பின் வழித்துணை வேண்டு மம்மா!
திண்ணமாம் யாப்பின் ஒண்மைத் தீச்சுடர்ப் படுஞ்சொல், பாட்டின்
சின்னமாய் மின்னி மின்னிச் சிலிர்த்திட வைக்கு மம்மா!

காப்பியம் படைப்போர்க் கெல்லாம் காப்பரண் யாப்பே என்னும்
ஏற்புரை உண்மை யாயின், இலக்கணச் செறிவின் மாண்பை
நூற்பெருங் கவிஞர் கூட்டம் நோன்பிருந் தேனும் எய்தல்
பாப்புகழ் தமிழோர் போற்றும் பழுதிலாக் கடமை யம்மா!..

கவிஞர்கள் வெண்பா யாக்கக் கற்றில ராயின், இந்தப்
புவிமிசைத் தமிழைக் காக்கும் புலவர்கட்(கு) எங்கே போவீர்?
நவின்றிடு கவிதைச் சொல்லின் நாணயம் காக்கும் யாப்பைத்
தவிர்த்திடும் பிழைமேற் கொள்ளல் தமிழிடம் வேண்டாம் அம்மா!..

வெல்கவி புனைந்தோ ரெல்லாம் வெண்டளை மறந்தார் இல்லை:
நல்கவி புனைவார் வெண்பா நாட்டலில் தவறும் இல்லை:
தொல்கலைத் தமிழர்ப் பாவின் சூத்திரம் அறிந்தி டம்மா!
கல்விசேர் தமிழுக்(கு) யாப்பு கட்புலன் நிகர்த்த தம்மா!”


தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It