Old ladyஅம்மா... அம்மா... அம்மா
நியாபகங்களில் அதிகம்
அம்மா அம்மாவென்று
நானுனை அழைத்ததுதான்,

எனக்கு பிடிக்காத ஒரு குழம்பாவது
என்றாவது நீ செய்ததுண்டா
கணக்கில் ஏன் தானோ தவறு –
உனக்கு பிடித்த ஒன்றும் நான்
இது வரையில் செய்ததில்லை

வாடகை கொடுமை
உன் பிள்ளைக்கு வேண்டாமென்று
உன்னையே தேய்த்து
நீ வீடு கட்டி தந்தாயே

எதுவரை படிக்கணுமோ
என்ன தான் ஆசையோ
எதற்கும் நீ சொல்லவில்லை
இல்லை என்ற ஒரு சொல்லை

எனது ஆறு வருட காதலுக்கு
கல்யாண அழகு பார்க்க
நீ சகித்த கொடுமைக்கு
என்ன செய்து நன்றி சொல்ல

அம்மா கேட்கிறது - உனது சத்தம்
‘நீ நல்லாயிருந்தா போதும்ப்பா...’

ஆயிரம் நோய்களை நீ மறைத்தாய்
ஆயிரங்கள் சேமித்து என் கடன் தீர்க்க
ஐம்பது வருடத்தில் நீ உனக்காக
என்றுமா மருத்துவமனை பிரவேசித்தாய்?

இரவு ஒரு மணி
பசியோடு கதவைத் தட்ட
ஓடி வந்து தண்ணீர் தந்து
சுட சுட தோசை தந்தாய்
அந்த ருசி என் நாக்கில்
இன்றும் உன்னை சுமக்குதம்மா

நான் பார்த்த முதல் மரணம்
என் நன்பனின் உடலில்தான்
கதறிய என்னை சற்று கட்டுக்குள் கொண்டு வர
தந்தது மது என்று குடித்த போது தெரியாது.

தள்ளாடி தள்ளாடி அழுது
நான் வீடு வர
எங்கள் பழைய கடிகாரம்
சத்தமாக பன்னிரண்டு மணியடித்தது

வியர்வை, கண்ணீர், போதை, நாற்றம்
இவை நான்கையும் அம்மா எப்படி பொறுத்தார்கள்.

மரணத்தின் சத்தியத்தை நீயென்
போதைக்கு சொன்னதில் அன்றே நான் தெளிந்தேன்

தவறு செய்தால்
உனக்கு கோபம் வரும்
என்னை திட்டிய பிறகு
என்னை நினைத்து நீ அழ
மறைவாக பார்த்த நான்
மரணம் வரை மறப்பேனா,

எந்த மாமியாருக்கு
எந்த மருமகள் நல்லவள்
எந்த மருமகளுக்கு தான்
நல்ல மாமியார்

உலக பிரச்சினைகளைத்
தீர்க்க முடியாத
கவலைப் பிரச்சினை (உலக மகன்களுக்கு)
மாமியார் - மருமகள்,

பாதிக்கப்பட்ட மகன்களில்
நானென்ன விதிவிலக்கா

எனக்குத் திருமணமானதும்
என் செல்லப்பிள்ளை
ஸ்தானத்தை ஏனம்மா
என் தங்கைக்குக் கொடுத்தாய்

எனது மொத்த பாசத்தையும் ஏனோ
குத்தகைக்குக் கொடுத்த போது
என்னம்மா இதெல்லாமென்றேன் அதற்கு
‘பொறாமை ..பொறாமை..’
என்று முணுமுணுத்தாய்

அம்மா நான் இன்று உன்
மருமகளுக்கு கணவனா
உன் மகனில்லையா

உங்கள் இருவரின் மௌனயுத்ததின்
உச்சியில் நான் ஏன் ஓரு மடையனானேன்,

உணர்ச்சிப்பிழம்பில் நான்
‘தனியே போயிடரேன்’
என்று சொன்ன போது
அம்மா உந்தன் நிசப்தம்
எனது வாழ்க்கையில்
இது தான் முதல் அதிசயம்

அங்கிருந்து முன்று மாதம்..
தனிக்குடிதனத்திற்கு எல்லாம் தயார்
புறப்படும் நேரம்

‘அம்மா வரேன்’ என்ற
இரண்டே வார்த்தை
சொல்ல கண்ணீருடன்
காலையிலிருந்து ஒத்திகை

ஒத்திகை முடிந்து
மேடைக்கு வந்திட்டேன்
வளர்ந்து மகிழ்ந்த
வீடு பார்த்தேன் மௌனம்
எல்லா செடிகளும்
ஏன் தொட்டால் சிணுங்கியாகியது

முப்பது வருட நியாபகங்கள்
ஒற்றை நொடியில்...
கனத்தன இதயம்,

‘சரிடா ஆனது ஆகடடும்
உள்ளே வா...”
என்று
நீயெனனை அதட்டி அழைக்க எனது
ஆணவம் எதிர்பார்த்தது.

என் சிந்தனை தவறுதான்

‘பிள்ளைமனம் பித்தாச்சு
பெற்றமனம் கல்லாச்சு’

சரி... அந்த இரண்டே வார்த்தை
‘அம்மா வரேன்‘ இதை
அரங்கேற்ற முயன்றேன்,

உணர்ச்சிப் பிழம்பானேன் உருகினேன்
பத்து வயது பிள்ளை போல்
அம்மா உன்னை
கட்டியணைத்து நான் அழ ...
உன் அழுகையை
என்னெவென்று நானெழத

என் புள்ளையை
பத்திரமா பார்த்துக்கோ என்று
நீ என் மனைவியிடம்
கூறியபோது நான் மீண்டும் அழுதேன்

ஆனால் ஒரு சந்தோஷம்
‘செல்லப் பிள்ளை நான்தானென்று
மீண்டும் மார்தட்டிக் கொண்டேன்’.

லாரியில் சரக்கேற்றி
என் துக்கமெல்லாம் அதில் வைத்து
ஓட்டுனரின் பக்கத்தில்
மௌனமாக நான் அமர்ந்தேன்
வண்டி நகர்ந்தது...
ஓட்டம் பிடித்தது
எதிரே ஒரு ஆடடோ ரிக்ஷா
அதில் ஒரு வரி கவிதை

‘மரணத்தின் பிரிவைக் காட்டினும் கொடியது
உயிரோடு பிரிவது’ 

சுரேஷ், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It