girlஇந்தக் கவிதைக்காக நான் அதிகம் உழைக்கவில்லை

கண்களை கொஞ்சம் மூடினேன்

வரிசையாய் ஊர்ந்து செல்லும் சும்மாட்டுத் தலைகளை
எண்ணி மாளவில்லை.
கந்தக அரும்புகளைத் தொடுக்கும்
விரல்களுக்கும் கணக்கில்லை

குட்டைக் குளக்கரையில் காமாட்சி
காய்த்துப் போன விரல்களால்
டயர் செருப்புக்கு ரெட்டைத் தையல் போட்டுக்கொண்டிருக்கிறாள்
அந்த வழி போக அஞ்சுகிறேன் இப்போதும்;
அவள் மறந்திருக்கலாம் தன் வகுப்புத்தோழனை.

அழுதுகொண்டே கடற்கரையில் சோளப்பொறி விற்பவளையும்
சிக்னலைக் கடக்கையில் கைக்குழந்தையுடன்
‘அண்ணா’ என என் சட்டையிழுப்பவளையும்
எங்க போன சனியனே என்று நச்சென்று
அம்மா கைச் சொம்பால்
மொத்துவாங்கி கண்கலங்கும் இவளையும் பார்க்கையில்
நினைக்கவெதுவும் தோன்றுவதில்லை
நின்றுவிடுகிறேன்.

வீரச்சிறுமி தான்யா என்றொரு கதை படித்த பின்
வெறுமையாய் உணர்ந்தேன் - நம்மிடம்
அவர்களுக்குச் சொல்வதற்கு கதைகள் கூட
இல்லையென்பதை.

ஆடுகின்ற மேசைக்கு அடியில் வைத்த
அட்டையென அவர்களையும்
மறந்தே போனோம் 

தங்கமணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It