கைதி

மூளைக்குள் புதைக்கப்பட்ட
தனிமை உணர்வுகளின்
பொறிகளுக்குள் முடங்கிப் போன
நானும் என் சுயமுமாய்...
சொல்லப்படாத வார்த்தைகளின்
கைதி நான்!

மௌனமாயிருக்கும்
ஒவ்வொரு பொழுதும்
பேச வேண்டிய கட்டாயங்களை
உணரப்பட்ட போதும்
நான், என் இயலாமையோடு
மௌனித்திருக்கிறேன்,
எனக்கான
முட்படுக்கைகளை தயாரித்தபடி...!

குற்றவாளிக்கான சித்தரிப்புகளோடு
வாழ்கைப் போரில்
தோற்றுப் போன கைதி நான்!
பழி சுமத்தவென்ற ஆயத்தங்களுடன்
கேள்விக் கணைகளோடு
எதிரில் நீ!

என்னை நியாயப்படுத்தவென்ற
சாட்சியங்கள் புறந்தள்ளப்பட,
போர்த்திறன் முடங்கி
முடுக்கிவிட்ட பொம்மையாக
இப்போது இயங்க வேண்டிய
கட்டாயங்களுடன்...
உன் வழக்காடுமன்றத்தில்
எனக்கான நியாயங்கள்
உனக்கு எதுவுமில்லாமல் போனது
விந்தை!

எறிவதற்காக
நீ தேர்வு செய்த கற்களின்
கனமும்,
வீசப்படும் வேகமும், துரிதமும்
கணிக்கும் முன்
சாய்க்கப்படுகிறேன்...
சந்தப்பமளிக்கப்படாத நிரபராதி
என்ற
சொல்லப்படாத வார்த்தைகளுடன்..!

தப்பிவிட்ட முனைப்பில்
என்னைப் புறந்தள்ளி
நடக்கிறாய் அவசரமாய்..!

உன்னோடான
அந்த நாட்களின் சந்தோஷங்கள்
இன்றைய நிகழ்வில்
அகழப்பட்ட புதைகுழியில்
ஆழமாக புதைக்கப்பட
மூளைக்குள் துருத்திய உணர்வுகளைச் சுற்றி
உயரமாய் முட்கம்பி வேலிகளை
முடைகின்ற சோகம்..!

என்னை நானே சிறைப்படுத்தலில்
உபரியான லாபம்
இன்னொரு தோல்விக்கு
என்னை பலியாக்காத பாதுகாப்பு..
உன் நிழல்களின் எல்லைகளை விட்டு
வெகுதூரத்தில்
எனக்கான சிறைக்குள்
இன்னமும் சொல்லப்படாத
வார்த்தைகளின் கைதியாகவே..!


இளமையைக் கரைக்கும் அவசரத்தில்
ஆயுளுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
பழையன மறக்கும் முனைப்புகளுடன்
உன்னை துரத்தும்
விருப்பமின்றி....


சந்தேகம்

நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!

அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலும்
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!

அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!

நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!


தனித்த தமிழச்சி!

மரணங்கள் சகஜமாகிப் போன பூமியில்
போர் உமிழ்ந்த எச்சங்கள்
தமிழ் பேசிய முண்டங்கள்!
பிராயங்கள் பேதமில்லாமல்,
பாலினங்கள் வித்தியாசமில்லாமல்...
குண்டு வீச்சில் சமத்துவம்!

கூட்டிப் பெருக்கிய குப்பைகளாய்
சேர்த்தெரித்த
பிணக்கும்பல்களின் நாற்றங்களையும் மீறி
என் சுவாசக் குளிகளுக்குள் மூச்சு
உயிரென்ற ஒன்றுக்கான சாட்சியாய்
இயங்க விருப்பமில்லாத ஆயுள் சுமையுடன்
தனியாக விடப்பட்ட அனாதையான நான்,
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்...
சொந்த மயானமான வீட்டின் பின்வளவில்
என் குடும்பத்தை எரித்த சாம்பல் மேட்டினருகில்,
எனக்கென்று மிச்சமாய் எதுவுமில்லாமல்...

வரையறுத்த வாழ்கை நியதிகளில்
பங்கு கொள்ள நாதியற்ற
நிகழ்தகவுகளான பொழுதுகளோடு
நிரந்தரமான போராட்டங்கள்,
பிரிவுகள், மரணங்கள்
பழகிவிட்ட ஆயுள்..
அதனால்
அழுவதற்கு தோன்றவில்லை.
சடுதியில் மரணம் தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்,
அதிர்ந்து போன உணர்வுகளுடன்...
உயிர் மட்டும் துடிப்புடன் உட்கொண்ட
சராசரி ஈழத்துத் தமிழச்சியாய்
நானும் அகதியாய்...அனாதையாய்...

இன்னும் எத்தனை காலம்
வேதனை விழுங்கும் வாழ்கையை ஜீரணிப்பது?
மண்டையோட்டினுள் வெள்ளைப் பிண்டம்
இரத்தத்தில் இரசாயன மாற்றமுருவாக்க
நரம்புகள் சுட்ட கணத்தாக்கங்களில்
வன்மம் வரிந்து வரிந்து
என்னுள் கிளர்ந்து கொழுந்தான அசுரம்...
ஆங்காரமாய்,
அழுவதற்கு அவமானப்பட்டது சுயம்...!

எதிர்காலமாய் இலக்கற்ற பாதை
எதிரில் இருளில் நீண்டு கிடக்கின்றது..
எங்கே போய் நிற்கும்?
விடை பயணப்பட்டால் மட்டுமே இனி...!

எனக்கான பாதையில்
என் குடும்பம் எரித்த சாம்பல் மேட்டை
அடையாள முதல் மைல் கல்லாக வைக்கிறேன்...
இனி மேல்
எனக்கு பதுங்கு குளிகள் தேவையில்லை...
பாதுகாப்பதற்கு எதுவுமில்லாத போது!
பாய வேண்டிய காரணங்களை
ரணங்களாக சேகரித்துவிட்டேன்..
வாழ்கையின் அடுத்த கட்டம் புனுக்கு எட்டவாய்..

முறிந்து போன கூண்டுக்கம்பிகளை
கடந்து நடக்கலாம் இனி..
மீள வந்தால்...
சரித்திரத்தின் ஒரு அங்கமாவது
என் கையிலிருக்குமே..?
அல்லது
சரித்திரத்தில் ஒரு துளியாகி போவேன்...!!

சுவாதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It