நிறைந்தும் மறைந்தும் நிரூபியாய்
மாயத்தில் நான் எங்குமிருந்து
ஒற்றனைப்போல் உம்மை கண்காணிப்பதறியாமல்
எனக்கிழைத்த அவமானங்களை நானறிவேன்

ஆத்திரம் தாளாது
அரூபம் கலைத்து வெளிப்பட்டிருப்பேனேயானால்
சுட்டுத் தள்ளியிருப்பீர்கள் என்கவுன்ட்டரில்
குறைந்தபட்சம்
பொட்டலம் விற்றதாய் பொய்வழக்கோ
பொடா வழக்கோ புனையப்பட்டிருக்கும்

பிரயோகிக்கும் கணம்வரையில்
ஆயுதங்களை மறைத்துவைத்து
துல்லியமான தருணத்திற்காக காத்திருக்கும்
தேர்ந்த வேட்டையாளியாய் பொறுமை காத்திருந்த என்னை
கையாலாகாதவனென்று பேட்டியும் பிரச்சாரமும் முடித்து
என் இடதுகை பெருவிரல் மையில் துளியெடுத்து
ஆட்காட்டி விரலுக்கு இடும்போது
நான் மெதுவே எழுந்து
நிச்சயிக்கப்பட்ட இரையைத் தின்னும் நிதானத்தோடு
என் வேட்டையைத் தொடங்கினேன்

உங்கள் கணக்குகளெல்லாம்
என் கட்டுப்பாட்டிலிருப்பதை உணர்த்தி மறைகிறேன்
கவனம் வையுங்கள்
வேட்டை எனக்கு விளையாட்டல்ல
ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.