நாள் முழுக்கச் சிந்திய
வியர்வையை ஒத்தியெடுக்க
தென்றல் கொண்டுவரும்
சித்திரை நிலவு

உட்சூடு கண்டு
நீர்க்கடுப்பில் துடிக்கும் மரங்களுக்கு
இலைகளில் வழிய வழியக்
கள்வார்க்கும்

நிலவு தீட்டிய
ஒளியின் கவிதையைத்
துணைகொண்டு பாடும்
ஆலமரத்துக் குயில்

புழுக்கம் தாளாத
ஆந்தைகள் கூடி
ராகம் தின்று
இமை மூடும்

வற்றிப்போன
குளம் குட்டைகளில்
தேங்கிக் கிடக்கும்
ஒற்றை விழியிலிருந்து
வழிந்த கனவு

மார்கழி தையில்
உள்ளே முடங்கிக் கிடந்தவர்களை
வெளியே இழுத்து வந்து
வானம் விழா நடத்தும்
நட்சத்திரம் அலங்கரிக்க
நிலவுத்தேர் ஊர்வலம் போகும்
எல்லோரும்
ஜோதியில் மோட்சம் காண்பர்

பிழைப்பு தேடி வந்தவிடத்தில்
வானத்தைக் களவு கொடுத்தாயிற்று
நிலவோ
உடந்து போயிற்று

பச்சியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.