நீண்ட மணற்பரப்பும், ஒற்றை நிலவும்
ஆர்ப்பரிக்கும் கடலும்
போதுமானதாகவே இருக்கிறது.
விரும்பிடத் தோன்றவில்லை
சட்டங்களுக்குள் அடைபட.
இதுதான் வாழ்க்கையென்றே உணர்த்திப்போன
பொழுதுகளில் எதார்த்தத்தின் கரங்கள்
கழுத்தை இறுக்க மூச்சு முட்டத் துவங்குகிறது.
உடைக்கவியலா கண்ணாடிச் சட்டத்தினுள்
அகப்பட்டுக் கொண்டதாய்
பொருமிக் கொண்டேயிருக்கிறது
என் மீதமுள்ள பொழுதுகளும்...
உன்னிஷ்டம் கேட்கப்போவதில்லையென
மிரட்டும் காலத்தின் சுழல்களில்
மூழ்கிப்போகிறேன்
வரங்களுக்கு சற்றும் தகுதியில்லாதவளாய்..
விருப்பு வெறுப்புகளற்ற பிராந்தியத்தில்
நடைபோடத் துவங்குகிறேன்
என்னுலகில் சஞ்சரிக்கும் சிற்றெறும்பு தேடி...
உங்கள் உலகத்தில் வாழ்ந்திராத எனக்கு
தெரியத்தானில்லை
உலகம் பற்றி ஒருவரி சொல்ல... 

சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It