என் கால்சட்டைப் பைகளிலும்
உன் பாவாடை மடிகளிலும்
எத்தனை நாட்கள் - நாம்
நிறைத்திருப்போம்
ஞாபகங்களையும்
நெல்லிக்காய்களையும்

எரியாத பிளாஸ்டிக் அடுப்பில்
சின்னதாய் பாத்திரம் வைத்து
ஒற்றை பருக்கை
ஒரு துளி நீர் சேர்த்து
நீ ஆக்கிய சோறு-
இன்று வரை
என் பசியாற்றுகிறது

காலையில் ஆபிஸ் செல்வேன்
சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பாய்
சமைத்துவிட்டு காத்திருப்பாய்
மாலையில் வீடு வருவேன்
மறுபடியும்
காலையில் ஆபிஸ்
இப்படி இரவுகளே இல்லாமல்
நாம் நடத்திய குடும்ப வாழ்க்கை
இனிப்பானது

பச்சக் குதிரை
விளையாடுகையில்
தெரியாமல் விழுந்து விட
முட்டியில் காயம்
அந்த காயத்தில் - நீ
தொட்டு வைத்த
எச்சில் மருந்து
அன்பு மருத்துவம்

இப்படித்தான்
ஏதோ ஒரு
கால் சட்டையும்
குட்டைப் பாவாடையும்
கை கோர்த்து நடப்பதை
பார்க்கும் பொழுதெல்லாம்
துளிர்த்து விடுகிறது
உன் ஞாபகமும்...
கண்ணீரும்...

பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It