Crying Eyeஆயிரம் முறை சொன்னேன்
இவள்தான் கேட்கவேயில்லை

நாங்கள் நுழைந்தபோது
மனசு நெளிந்து சிரித்து வைத்தீர்கள்

விட்டத்தில் கவிழ்த்து வைத்திருந்த
கருவாட்டுச் சட்டிபோல்
எங்களுக்காவும்
சில வார்த்தைகள் இருந்தன

தம்பி குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
கைநீட்டும் உங்களைப்போல்
சம்பிரதாயத்திற்குத் தாவ
தெரியவில்லை
என் மகளுக்கு

தண்ணீர்ப் பம்புகளாய்
எட்டிப்பார்த்துப் போகும்
பக்கத்து வீட்டுக்காரர்களிடம்
சீழ்பிதுக்குகிற அவஸ்தையோடு
எதையோ கிசுகிசுக்கிறீர்கள்

எரியாத அடுப்பு
ஆள்பார்த்து உள்நுழையும் தெருநாய்
கயிறறுத்துப் போகும் கன்றுக்குட்டி
விளையாடிவிட்டு வரும் தம்பி
எல்லாமும் சாக்காகிறது
எங்கள் காதல் மணத்தை
தூற்றி முடிக்க

அடுப்படியில் அவளும்
திண்ணையில் நானும்
உடைந்துபோன பொம்மைகளோடு
குழந்தைகளுமாய்க்
கழிகிறது
நல்ல நாள்

விடைபெற்றுத் திரும்பும்போது
நீங்கள்
சாதாரணமாய்த்தான் சொல்லியிருக்கக் கூடும்
‘கண்ணே... எல்லாத்தையும் ஏறக்கட்டுடீ
வீட்டையெல்லாம் கழுவணும்’ என்று
இருந்தும்
கண்ணீரின்றித் திரும்பிப் பார்க்க இயலவில்லை
என்னால்


பச்சியப்பன்
Pin It