Devilஅகிலந்தான் அறிவியலின் யுகமாய் ஆச்சு;
அதிவேக இயந்திரமாய் வாழ்க்கை போச்சு!
திகிலூட்டும் சம்பவங்கள் கதையைத் தாண்டி
தினந்தோறும் நடப்பதுதான் வழக்க மாச்சு!
மகிழ்வூட்டும் பொழுதுபோக்கே மூச்சாய் மாறி
மானுடத்தை அணுவணுவாய்க் கெடுக்க லாச்சு!
நெகிழ்கின்ற நல்லுள்ளம் கல்லாய்த் தோன்றி
நிஜத்திலும் பொய்கலக்கும் நிலையு மாச்சு!

தாய்தந்தைப் பாசங்கள் எல்லை தாண்டி
தரணியெங்கும் காதலிலே மூழ்கிப் போச்சு!
ஆய்ந்தறியும் நட்பெல்லாம் அகராதி யோடே
அடைகாத்து வைக்கின்ற கால மாச்சு!
பாய்ந்துவரும் கடலலையாய்ச் சவால்கள் நாளும்
படையெடுக்கும் நரகமென வாழ்க்கை யாச்சு!
தேய்ந்துவரும் பிறையெனவே மனித வாழ்க்கை
திசையறியா மரக்கலமாய் மாறிப் போச்சு!

இப்படியே செல்வதிலும் பயனே இல்லை
இனியென்ன ஆகுமென்றும் தெரிய வில்லை
தப்பான வழிதன்னில் செல்லும் போதில்
தடுக்கின்ற தடைக்கற்கள் நமக்குத் தேவை!
உப்பாக அளவுடனே இருந்து விட்டால்
ஒருபோதும் துன்பத்திற்கு இடமே இல்லை!
எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும்
ஏமாந்தால் நம்வாழ்க்கை கெட்டுப் போகும்!

ரா விமலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It