1.

நியாம்கிரி மலைச்சாரரில்

பூங்கடல்போல் பூத்திருந்தன பூக்கள்

நாணலை பற்றியபடி பூச்சரம்போல்

balan_tribesகத்திக்கொண்டிருந்தன பறவைகள்

ஒருதிசையில் மௌனம் கலைந்திருந்தது

வேறுதிசையில் இருள் சூழ்ந்திருந்தது

புயல்காற்று கட்டியிருந்த கூடுகள் களைக்கப்படுவதை

அணை உடைந்த நதி பார்த்துக் கொண்டிருந்தது.

 

அங்கே உதைப்பட்டு சிதைக்கப்பட்ட முகத்துடன்

வேதாந்தா மிருகம் ஒன்று நின்றிறுந்தது

எதிர்திசையில் சிகப்பு தலைப்பாகையணிந்தவர்கள்

கோடரி கொம்புகளுடன் நின்றிருந்தனர்

அது கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது

அவர்களும் கவனமாய் கேட்டு பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்

அது திடீரென பதில் சொன்னவர்களின் குரல்வளையை கவ்வியது.

 

தூரத்தில்

புத்தகநிழலில் மின்னும் மகுடங்களுடன்

எதிர்திசைகளில் புடைசூழ பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோடுதாண்டி பயணிப்பவர்கள் படிதாண்ட மறுக்கின்றனர்

 

பழமையினை என்ணி பெருநினைவில் வாழ்தலில் பயனில்லை

இந்தப் பாதையில் நீண்டதூரம் செல்லவேண்டும்.

திருந்தா நடையிலும் குழந்தை பருவத்து பயணங்கள்

பல நூற்றாண்டாய் தெரியும்

குறுதியில் நனையும் உலகம் தடங்களை சுமக்கும்

வரலாற்று மரத்தில் இலைகள் ஒவ்வொன்றாய் துளிர்க்கும்.

2.

அரச படைவீரனே

இங்கு வரவேண்டாம் என்றபின்னரும் ஏன் வந்தாய்?

 

நீ சொல்வது சரிதான், எனக்கு தெரியும்

நீ யாரையும் கேட்டு இங்கு வரவில்லை

ஆணைக்கு அடிபணிகிறவன் நீ.

 

நீ சொல்வது சரிதான், எனக்குத் தெரியும்

அம்மா, மனைவி அல்லது காதலி உனக்கும் இருக்கிறார்கள்

ஆனால் அவர்கள் கிராமத்தில் நிற்கிறாய் நீ.

 

மரணம் அவர்களுக்கு மட்டுமில்லை

காயங்களும் அப்படித்தான்

அமைதியற்ற இடங்களில் நீ உறங்குகிறாய்.

 

நன்றாக நினைவுபடுத்திச் சொல்

நீ அந்த கிராமத்திற்கு வந்தபோது

அமைதிக்காக மட்டும்தான் வந்திருப்பதாய் சொன்னாய்

உனக்கு தெரியுமா?

நீ விரும்பும் அனைத்தும் அவனை மிகவும் துன்புறுத்துகிறது.

 

படைவீரனே உனக்கு தெரியாததை சொல்கிறேன் கேள்

நீ மடிந்தால் நாய்கள் தான் உன்னை புதைக்கும்

உனக்குத் தெரியுமா?

அவர்களைப் போலவே நானும் கோழைதான்

சிறையும், தூக்குக் கயிறும், இருண்ட அறைக்குள் அலறல் சத்தமும்

என்னிடம் இல்லை

 

முன்பொருமுறை

எனக்காக நீ கொண்டு வந்த அமைதியைப் போலவே

அவர்கள் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருக்கிறது.

 

வீரனே இறுதியாய்ச் சொல்கிறேன்

நீ இருப்பது காற்றை நாசப்படுத்துகிறது

காற்றினூடே உலவித்திரிவர் அவர்கள் முன்னோர்.

நீ அவர்களை வாழ்விப்பதாய்ச் சொல்வது

மரணமே இல்லாத அந்த பசுமையான மலைகளை அழிப்பதற்காக.

அயராது இயங்கிக் கொண்டிருக்கும்

அந்த நிசப்தத்தை உடைக்கத் தூண்டாதே அவர்களை.

 

திரும்பிப்போ வீரனே

இரத்த வெள்ள தீய கனவினூடாக விம்மித்தணிகிறது அந்த கிராமம்.

3.

ஒவ்வொரு முறையும்

உங்கள் நாடு எங்கள் கிராமத்தில் கால் பதிக்கிறது

 

எங்கள் கிராமத்தில் தவழும் செடிகொடிகள்

உங்கள் பால்கனியில் ஊசலாடுகிறது.

 

உங்கள் நாடு

எங்கள் மூதாதையரின் பொக்கிஷங்களை அழித்து விடுகிறது

காட்டுவளங்களையும் விழுங்கி விடுகிறது.

 

ஒவ்வொரு முறையும்

எங்கள் இருத்தல்கள் ஆக்கிரமிக்கப்படும் போது

விளைநிலங்கள் புதைக்கப்படும்போது

உங்களால் பலியிடப்பட்ட எங்கள் கிராம தேவதைகள்

சிதைக்கப்பட்ட முகத்துடன் சிகப்பு தலைப்பாகையணிந்தபடி

கையில் சூலத்துடன் வாயில் தொங்கும் நாக்குடன்

கோரப்பற்களை வெளிக்காட்டி

ருத்திர தாண்டவம் நிகழ்த்தியபடி கிராமத்தைச் சுற்றி வலம்வரும்.

 

-இரா.பாலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It