கீழே விழுந்தாழும் எழு
Ambition
விதைகள் விழாமல்
விருட்சமாக முடியாது
ஒரு போதும் தலை கவிழ்ந்து
நடவாதே
புல் மேய்வனதான் தலைநிமிர
பழகாதவை

காட்டாறு போல் பேசு
கரையோரம் அடிபடும் நாணல்கள்
வளைந்து கொடுத்தே
வாழ்க்கை நடத்துபவை
உனக்கு சரியென்பதை
ஊருக்கு சொல்
தவறுதல்களுக்கு தயங்காமல்
மன்னிப்பு கேள்

நெருப்பாக இரு
அது மற்றவர்க்கு ஒளி தரும்
பட்சத்தில்
அரை மணி நேரமாவது
ஆகாசம் பார்
அது உன் எண்ணங்களை
விசாலமாக்கும்
வாரம் ஒருமுறை மனிதர்கள் இல்லாத
மலைப்பிரதேசங்களுக்கு போய் வா
அது உன் இதயப்பிரதேசங்களை
குளிர்ச்சியாக்கும்
அந்தியின் மவுனங்களை
ரசி
அதிகாலை அமைதியில்
ஞானம் கொள்
ஆலமரக்குருவிகளின்
காதலில் சிலாகி
சுட்டெரிக்கும் வெயிலில்
நடந்து பழகு
இரவின் தனிமையில்
கவிதை எழுது
பெய்கிற மழைக்கு
குடை தேடாதே
குதித்து கும்மாளமிடு

உன் கனவுகளை
வானத்தில் வை
அப்போதுதான் அது
யதார்த்தங்களை
உடைக்கும்

சோகங்களில் புதைந்து
விடாதே
சந்தோஷம் பெறத்தான்
பூமி

எல்லோரையும் பிரகாசிக்க
வை
நீ சூரியனுக்கு சொந்தக்காரன்
கதிர் முற்ற தலை சாயும்.
கதிர் மாதிரி இரு

வில்லில் இருந்து கிளம்புகிற
அம்பு மாதிரி
உன் வேலையை முடி
குறுக்கீடுகளை உன் கூர்
மதியால் வென்றெடு

நண்பர்களுக்கென
நாள் ஒதுக்கு

வருஷத்துக்கொருமுறை
கடல் பார்த்து வா
அலைகளின் அனுபவம்
பாடமாகும்
தினம் ஒரு மரம் நடு
இந்த பூமி பூப்பதில்
உனக்கும் பங்கிருக்கிறது

மாலையில் செடிகளுடன்
சிறிது நேரம் பேசு
அதன் தாகத்துக்கு தண்ணீர்
கொடு

பூ மலர்வதை அருகிருந்து
கவனி
ஏதவது ஒரு பறவை
வளர்

இரண்டு நாட்களுக்கு
ஒருமுறை
கிணற்றில் நீந்து
இதைவிட சிறந்த
உடற்பயிற்சி இல்லை
வாரம் ஒருமுறை வயிற்றுக்கு
ஓய்வு கோடு
வாழ்க்கை இருக்கும்வரை
அதை அர்த்தமுள்ளதாக்கு

சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It