வினோதகனாய்த் தெரியும் ஒருவன்
people
நகரத்தின் சந்தடி மிகுந்த சதுக்கங்களில் நின்று
தன் கைவசமிருக்கும் மீசைகளை விற்றுவிட்டுப்போக காத்திருக்கிறான்
வேறொரு நகரத்தில் நேற்றிருந்தது போலவே

அவனுக்குத் தெரியும் அவனது வாடிக்கையாளர்கள் யாரென்று
மீசையின் மகிமையை அறிந்த அவர்கள்
நகரத்தின் இண்டு இடுக்குகளிலிருந்து கரப்பானைப்போல வெளிப்படுவார்கள்
இருட்டத் தொடங்கியதும்

நூறுமீசைகளை வைத்துப் பார்த்து ஒன்றை தேர்வுசெய்கிறவராய்
அவனது வாடிக்கையாளர் ஒருபோதும் இருப்பதில்லை
கஞ்சாப்பொட்டலம் கைமாறும் லாவகத்துடன்
முகமேற்றி அனுப்பிவிடுவான் மீசைகளை

வேண்டாமென யாரோ மழித்தெறிந்த வெறும் மயிர்களைக்கொண்டு
அவன் படைத்தனுப்பும் புதிய ஆண்கள்
அந்த நொடியிலிருந்தே மீசையை முறுக்கி
வீரத்தையும் அதிகாரத்தையும் ஆண்மையையும் வெளிப்படுத்துவார்கள்
தங்களது ஒட்டுமீசை விழுந்துவிடக்கூடாதென்ற பயத்தோடு.

நன்றி: உயிரெழுத்து

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It