அடிவளவில் மாமரப் பொந்தொன்றைக் காட்டி
மாமா நீ பிரசுரங்களும் கைத்துப்பாக்கியும்
மறைத்து வைத்த இடமென்பர்.

நீ காணாமற் போன நாளில்
சுருட்டிய கடிதம் கண்டெடுத்த
சீனிப் போத்தலென்று அடையாளஞ் சொல்வர்.

இந்திய இராணுவம் சுற்றிவளைக்கையில்
நீ இறங்கிப் பதுங்கிய கிணறு பற்றியும்
பக்கத்து வீட்டார் கதை சொல்வர்.

அகதியாகப் புகுந்த நாடொன்றிலிருந்து
அனுப்பிய புகைப்படத்தில் அடையாளங்காட்டி
மகிழ்ந்தாள் என் அம்மா.

பிடுங்கிய கச்சான் கன்றுகளின் குவியலிற்
பயந்து ஒழிந்த அக்காவை
இறாஞ்சிப் பறக்கும் பருந்துகளாகக் கொத்திச்சென்றனர்.
விம்மியழுது தேய்ந்த குரலொலி
பின்னொரு அணிவகுப்பில்
இறுகிப் போயிருக்கக் கண்டேன்.
காற்றில் கலந்தாள் காவியமானாளெனக்
கதை சொல்லி இழவு வந்தது.

இன்று
சிதறிடும் குண்டுகளினின்று தப்பிக்கச்
செவிடாய்ப் போகாத காதுகளை நொந்தபடி
ஓடிப்பதுங்க
அதிலொன்று வீழ்ந்திடும் என்மீது
சிந்திச் சிதறி இரத்தமும் சதையுமாகி
வயலிலும் வரப்பிலும் கரைந்திடுவேன்.

என்றோ ஓர் நாள் நீ வருகையில்
அடையாளமற்ற வெளிகளாயிருப்போம்
மீண்டுமொரு விமானமேறி விரைந்திடுவாய்.

தர்மினி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.