கேரதீவும் சங்குப்பிட்டியும்
War
சங்கமித்து விட்டதாம்
குடமுருட்டிக் கரையை நோக்கி
நீண்டிருந்தன
துப்பாக்கி முனைகள்.
பண்டைய நல்லூரின்
மையப்பகுதியில்
சிங்கக்கொடி பறப்பதாக
காற்றிலே ஒரு சேதி.
புதைந்துபோன ஈமத்தாளிகள்
மீண்டும் தோண்டப்படும்
காலம் நெருங்குவதாய்
என் மனதில் ஒரு நெருடல்.
கூதல் காற்றும் உப்பு வெளியும்
இறுகக் கட்டிச் சல்லாபித்தபடி
உறைந்திருந்த வேளையில்
சிவபூசைக் கரடிகள்
சாபம் பெற்றனர்.
உமையாள் புரத்தில்
செல்கள் வீழ்ந்து வெடிப்பதாய்
காற்றில் வந்த
அந்தச் செய்தி மீண்டும்
காதோரம் உரைத்துச் சென்றது.

2.

கிளிநொச்சி நகரம் தாண்டி
படைகள் நகருமென்று
அறிக்கைப் போர்கள்
வரத்தொடங்கி விட்டிருந்தன.
அலைகள் ஆர்ப்பரித்து
கரையைத் தொட்டு
மோதிப் பார்த்தன.
மணலில் முட்டி
தடம் பதித்து மீண்டும்
கடலில் விழுந்து மாண்டுபோயின.
முரட்டு அலைகள்
ஆர்ப்பரித்து மீண்ட பின்னும்
கடல் நடுவில் அமைதி கண்டேன்.
அலையைக் காணோம்
கரையைக் காணோம்
தொடக்கம் காணோம்
முடிவு காணோம்
இரைச்சல் காணோம்
திசை மட்டும் கண்ணில் தெரிய
சுட்டிய திசையில்
பயணம் தொடரும்.

3.

கமகேயும் அமலியும்
மீண்டும் தமக்குள் ‘ஆதரே’
சொல்லி இனிப்பு உண்டனராம்.
பட்டாசு வெடித்து
புத்தாடை உடுத்தினராம்.
‘யுத்த எப்பா’ கோசம் நீக்கி
பிக்கு கையில் வாளை எடுத்தான்.
சிங்கம் தனித்து சோர்ந்து படுத்தது.
தவளைகள் பாய்ந்து
தடுமாறிய காலம் போய்
வீறாப்பு பேசி வீதியில் நுழைந்தனர்
லொக்கு மாத்தையாவும்
களுபண்டாவும் சுதுமல்லியும்
கிண்டலடித்தபடி
கித்துள் கள்ளருந்தி
மாலுகடை மாத்தையா வீட்டில்
வயிறாற உண்டு திளைத்தனர்.

4.

ஆகாயவெளியும் உப்புக் கடலும்
அடுத்த சமருக்கு
ஆயத்தமாகிக்கொண்டிருந்தன
எங்கள் நிலத்தில்
மனித விடுதலையின் மூலவேர்
மாரி முழக்கத்துடன்
மடிந்து ஆழ்ந்து
தூங்கிக்கொண்டிருந்தது.
கண்ணீர் மனித குலத்தின்
பொதுவான சொத்துதான்
அதற்காக இப்போது அழாதே
பெருங்காற்றில் உழன்றெரியும்
மூங்கில் காடுபோல்
பற்றி எரிந்திட மனம் ஒப்பவில்லை
நட்டாற்றில் விடப்பட்ட
துடுப்பிழந்த படகா நம் வாழ்க்கை
இல்லையே
தோப்போடு கூடித்தானே
ஊர் பிரிந்தோம்
ஊர்பிரிவதும் பின் புகுவதும்
நம் முன்னையகால
நினைவுகள் தாமே
காலத்தை ஒருகணம் கேட்டுப்பார்
முறையாக உரைக்கும்
நம் வரலாற்றை அது உனக்கு
இன்றைய துயிலின்மை
நாளைய விடிவை
வரவேற்கக்கூட இருக்கலாம்தானே
அதுவரை சுழலும்
பூமியாக நாம் மாறி
நம் அச்சில் மீண்டும்
நாமே சுழல்வோம்.

- தியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It