அரசாங்க அலுவலகங்களில் தேங்கிக்கிடக்கும் ஃபைல்கள் எத்தனையோ! ஒவ்வொரு ஃபைலின் பின்னாலும் ஒரு வாழ்க்கை விடியலுக்காகக் காத்திருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தை தட்டிக்கேட்க யாரும் இல்லை. ஃபைல்கள் பொறுமையிழந்து கோபாவேசம் கொண்டு வீதியில் ஊர்வலமாக இறங்கிப்போனால் எப்படியிருக்கும்? ஒரு மலையாளக் கவிஞர் அரசாங்க அலுவலகங்களில் தேங்கிக்கிடக்கும் ஃபைல்கள் ஊர்வலமாகப்போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார்.

Human faces
அற்புதம்! அற்புதம்!
ஆகா!...ஆகா!
ஃபைல்களின்
ஊர்வலம் அற்புதம்!

சர்க்கார்ஆபீஸ் விட்டு
தலைநகரம் நோக்கி
ஃபைல்களின் ஊர்வலம்
அற்புதம்!

உண்மைதான்
இது
உண்மைதான்!
கேட்கத்தான்
இது
கஷ்டம்தான்!

மணியோ
பன்னிரண்டு முப்பத்தைந்து!
எல்லாக் கேடரும்
இறங்கிப் போயினர்...
சாப்பிடப் போயினர்!

பசிக்கும் மிருகமல்லவா
மனிதன்!
பியூனும்
கிளார்க்கும்
மந்திரியும்
மற்றவரும்!
சமமல்லவா
பசிக்கும்போது!

வேகமாய்ச் சுழலும்
மின்விசிறிகள் மேலே!
ஆளில்லா
நாற்காலிகள் கீழே!
பியூனில்லா
வராந்தாக்கள் வெளியே!

நாளும் துன்பம்
சகித்தன ஃபைல்கள்.
தக்க சமயம் இதுவெனக்
கண்டன.

அலமாரியில்!
மேசைமேல்!
ஷெல்ஃபில்!
எலிகுடியிருக்கும்
மூலையில்!
இருந்தெல்லாம்
இறங்கின ஃபைல்கள்!
கோபாவேசத்தோடு!
அவர்தம்
சங்கடம் போக்க
அவையே
ஊர்வலமாய்ப் போயின
கோபாவேசத்தோடு!

சிவப்பு நாடாக்குள்ளே
மூச்சு
திணறிக் கொண்டிருப்பவை!
சவத்துணியாய்
மேலே
தூசுகட்டிப் போனவை!
நாடா
இற்றுப் போனவை
சொந்தநாடா
இழந்து போனவை

அங்கு...அங்கு..
இங்கு...இங்கு...
என்று
பம்பரமாய்
சுற்றிச் சுழன்றதில்
படாதபாடு
பட்டவை.

கரப்பான் தின்றதால்
பாதியாகிப்
போனவை!
சுற்றிலும் நாற்றம்
பரவக்
காரணமாகிப்
போனவை!

சுண்டெலி கரண்ட
உடல்
கொடுத்தவை!
மந்திரி மகான்
மாறும் போதெல்லாம்
மேலும்
கீழும்
பலமுறை மாறிச்
சென்றவை!

திக்கற்ற ஃபைல்கள்
திரண்டன வீரியத்தோடு!
கூவின நடுத்தெருவில்
ஆகாயம் பிளக்கவே!

"நாங்கள் பொறுத்தோம்!
நாங்கள் சகித்தோம்!
நாளெல்லாம்.!
பலப்பல சுயநல
தலைவரளித்த
நோவெல்லாம்!"

"சட்டமும்
இல்லை!
நீதியும்
இல்லை!
சமயம் பார்த்துக்
கையூட்டு!
இவற்றின் நடுவே
நேர்வாழ்வு!
நடக்குமோ
அய்யகோ
நடக்குமோ!"

"மானம் காக்க
ஆளில்லை
கஷ்டம் காக்க
ஆளில்லை
ஃபைல்கள் எங்களின்
வேதனையை
அன்புப் பொதுஜனம்
அறிவீரோ!"

"கடமை தவறிய
அலுவலர்க்கு,
நீதி உணர்வு ஊட்டியபின்,
அலுவலர் தம் உள்ளத்தில்
குடிமை உணர்வு ஊட்டியபின்
ஊழல் நீங்கிய அலுவலகத்தில்
திரும்பி வருவோம்
கட்டாயம்."

பட்டணம் குலுங்கிய
ஊர்வலத்தால்
அமைச்சருள் நல்லவர்
அக்கணமே
கடுகிவந்தனர் காற்றாக.

தலைமைச் செயலக
முன்னிலையில்
சிலையாய்ப் போனான்
வேலுத்தம்பி.

நீதிமானின் ரத்தினமாம்
அவன்
நெடிதுயர்ந்த
சிலை முன்னால்
துக்கக் குரலில்
கெஞ்சி நின்றன
சர்க்கார் ஃபைல்கள்!

"நீதி பாலகா
கண்திறப்பாய்!
நின்
தண்டனை முறைகள்
வென்றெடுப்பாய்!
நியாயம் தழைக்க
உருவெடுப்பாய்!"

"நின் அன்னைக்குச்
சலுகையாய்
வரிக்கணக்கு
எழுதிப்பார்த்த
கண்டெழுத்துப்பிள்ளையின்
கைவிரலை
அரிந்தெடுத்த
வாள்தானே
நின் கையில்!

வாளுயர்த்தி
கிழக்காய்த்
திரும்புவாய் நீ
வெட்டியெறிவாய்
தன்னலத்தை!
பாரபட்சத்தை!
அநியாயத்தை!

கைக்கூலிக் கரங்களை
நறுக்குவாய்
கண்டதுண்டமாய்!

வெட்டுவாய்!
பொதுப்பணத்தை
வீண்டிப்போரை!

கடமை மறந்து
மின்விசிறியின் கீழ்
நாளைக் கொல்லும்
சம்பளப் பணியாளனை
உதைத்துத் தள்ளுவாய்!

இந்நாட்டு மனிதர்தம்
நாகரிகத்தில்
அச்சுறுத்தாமல்
பிறக்குமோ குடிமை உணர்வு?

நீதி பாலகா
கண்திறப்பாய்
நின்
தண்டனை முறைகள்
வென்றெடுப்பாய்
நியாயம் தழைக்க
உருவெடுப்பாய்

நிர்சலனமாய்
நின்றுபோனார்
வேலுத்தம்பி
பற்றற்ற
சிலைவடிவாய்

ஓ...!
என்றோ கொன்றவை
அன்றோ!
தேசபக்தியும்
தர்மமும்
நியாயமும்
மண்ணடிக்காவில்!

சொந்த நாட்டை
சுவர்க்கமாய்
மாற்ற வந்த
புதுப்புது மந்திரிகள்
சுறுசுறுப்பாய்க்
கேட்டனர்
பர்சனல் கிளார்க்குகளிடம்

தொந்தரவாய்ப் போனதய்யா!
என்னய்யா செய்யட்டும்
இனிநான்?

போய்யா போய்த்தேடு!
நான் கொடுத்த
பயணப்படி ஃபைலும்
போயிற்றோ தெருவோடு
அலறினார் அவரவரும்.

(தன்னுடைய தாய்க்கு வரிச்சலுகை காட்டிய கணக்குப்பிள்ளையின் கட்டைவிரலை வெட்டிய வேலுத்தம்பி தளவாயின் சிலை திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலகத்தின் முன்னால் நிற்கிறது. உயர்த்திய வாளுடன் நிற்கும் வேலுத்தம்பியின் சிலை கிழக்குநோக்கித் திரும்பினால் அவருக்கு தலைமைச்செயலகம்தான் கண்ணெதிரில் தெரியும்)

மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It