நீண்ட
ஒற்றையடிப் பாதையில்
இலக்கின்றி
பயணிக்கும்
ஒரு வழிப் போக்கனாய்
என்னை நான்
உணர்கிறேன்

சில சமயம்
சொந்த நிழலில்
இளைப்பாறி
சில சமயம்
அது கூட இன்றி
தொடர்கிறது பயணம்

ஆங்காங்கே
தென்படும் பிற
பாதச் சுவடுகள்
இன்னும் பயணிக்கலாம்
என்ற நம்பிக்கையில்
நீரூற்றுகின்றன

அடிக்கடி
ஒரு சந்தேகம்
அவசரமாய்
எழுந்து மறையும்
நான் போவது
மனம் போன போக்கிலா?
கால் போன போக்கிலா?

முன்னாலும்
பின்னாலும்
என் போலவே
பயணிக்கும்
பலருடன்
எதுவும் பேசாமல்

சூழ்ந்திருக்கும்
இயற்கை வனப்பை
நின்று பார்த்து
ரசிக்காமல்
எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருக்கும்
இதுவெல்லாம்
ச்சே
ஒரு பயணமா?


- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It