விடை கொடு காதலனே..!
கண்ணீர் விடாதே..!
இருள் போர்வைக்குள்
உன்னுடன்
இனிய சுகங்களைப்
பகிர்ந்து கொண்டதென்னவோ
உண்மைதான்..
நீ மேய்ந்த இடங்களெல்லாம்
நித்தமும் உன் நினைவைச்
சொல்லிக் கொண்டிருக்கும்!
ஆனாலும் அன்பே..!
பிரிந்து செல்கிறேன்..
நான் காதலை நேசிக்கிறேன்
கூடவே என் கனவுகளையும்!
ஒரு வேலைத் தேடித் தராத
உன் வெற்றுப் பட்டம்
என் எதிர்காலக் கனவுகளை
எரித்தே விடும்!
உன் உதடுகளில் எனக்கு
உணவு கிடைக்காது!
கரடு முரடான பாதையில்
கை கோர்த்து நடந்து
நாளைய வாழ்வை
நரகமாக்குவானேன்..?
ஓலைக் குடிசையில்
உள்ளங்களின் சங்கமத்தில்
காதல் கீதம் பாடி
களித்திருப்போமென்கிறாயா?
கற்பனையில் இவையெல்லாம்
கற்கண்டு விசயம்தான்!
சுடுகின்ற நிஜங்களில்
வாழ்க்கையின் தேவைகள்
சுட்டெரிக்கப்படும்போது
காதலென்பது வெறும்
கண்ணீராய்த்தான் முடியும்!
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது காதலனே!
நம்முடைய நெருக்கம்
நமக்கே சுமையாகுமுன்
நண்பர்களாகவே பிரிவோம்!
விடை கொடு காதலனே..

- பெமினா (துபை) (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It