நினைவின் வெளியில்
பறக்கும் பறவை
காலத்தை பின்னோக்கி
எடுத்துச் செல்கின்றது
தன் சிறிய அலகில்
கவ்வியபடி

கூடடைதல் என்பது
உயிர் மீண்டும்
உடலை அடையும் பயணமின்றி
வேறொன்றில்லை

அங்காங்கே பாதையில்
பிய்த்துப் போட்டு வந்திருந்த கனவுகள்
மரமாகி வளர்ந்து
இன்று
அமர்ந்து செல்ல கிளைகள்
தரும் போது
உறுபசிக்கு உணவு தரும்
அட்சய பாத்திரங்களாகி விட்டனவே
அவைகள்

இப்படி எத்தனை எத்தனை
கனவு விருட்சங்கள்
என் பெயர் சொல்லி
எங்கெங்கே
வளர்ந்திருக்கின்றனவோ
யார் கண்டது?

பிரஞ்ஞை இழக்காமல்
ஒலியின் வேகத்தில் பயணித்தாலும்
எத்தனை மில்லியன்
ஆண்டுகள் ஆகுமோ
சேருமிடம் சேர்வதற்கு?

பயணமே கதி
என்றாகிப் போன
வாழ்வில்
தனியாக பறத்தல் என்பது
பிரபஞ்சத்தில்
நிற்காததொரு
பரமபத விளையாட்டு தான்

சேரும் நேரம் வரும் போது
கூடில்லாமல் போனாலும் கூட
அதன் தழும்பாவது
மிச்சமிருக்குமோ
என்னவோ
பிரிந்து சென்ற கிளையில்
காலத்தை எடுத்து
காலத்தில் சேர்ப்பதற்கு

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.