விடை தெரியாத கேள்விகளும்
கேள்விகளற்ற பதில்களும்
ஒரு மழைக்காலத் தும்பியின் சிறகுகளை
ஈக்களாக மொய்த்துக் கொண்டிருக்கின்றன
இவ்விரவில்

நள்ளிரவில் திசைதொலைத்தலையும்
பறவையின் துயரத்தை
அதன் சிறகுகளைத் தவிர
வேறு யாரறிவாரோ?

புத்தனின் மனச்சுமையை
போதி மரம் அறிந்திருக்காது
அப்போது

லார்வா சித்தார்த்தனின் இளஞ்சிறகுகுகள்
தேடலின் கொடுஞ் சக்கரங்களுக்குள்
சிக்கி பிழியப்பட்டு
வீதியில் தூக்கி வீசப்பட்ட நொடி

ஒற்றை சாட்சியாய் இருந்த
பித்துக் குளி நிலவு
நதியில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறது

தூக்கத்திலிருந்து விழித்த
நதியின் தேவதை
நீ விடியும் வரையில் மீனாக நீந்து
என்று சபித்து விட்டு
மீண்டும் சற்று கண்ணயர்கிறது

காலையில் கண் விழித்ததும்
நதியும் மீனும் புத்தனும்
காணாமல் போக
இளஞ்சித்தார்த்தன்
நேற்றுபாட்டிலில் மீதமிருந்த
சரக்கால் கொஞ்சம்
நாவை நனைத்து விட்டு
வீதிக்கு இறங்கி வருகிறான்
அன்றாடப் பணிகளுக்கு

- தங்கேஸ்

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.