அடுக்களையோடு
உறவாடித் தீர்ந்து போன
அம்மாவின் உடல்
அத்தனை கனமில்லை என்கிறார்கள்
அம்மாவின்
இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள்

உண்மைதான்
தன் தியாகத்தை மீறித்
திரண்ட கண்ணீர்த் துளிகளை
அவள் தலையணைக்குத்
தந்து விட்டாள்

உள்ளுணர்வோடு
கையிலேந்திப் பாருங்கள்
அவளின் இலவம்பஞ்சுத் தலையணை
அத்துனை கனமாயிருக்கும்

வெற்றிலைக் கொடிபோலிருந்த
அப்பாவை இறுதியாய்ச் சுமந்தவர்கள்
அடிக்கடி
தோள் மாற்றிக் கொண்டார்கள்
அத்துனை கனமாம்

அவர் தாங்கியதைத் தாண்டி
இறக்கி வைக்க
எதையும் உபயோகிக்கவில்லை போலும்
வேறு வழி இல்லை

அதே உள்ளுணர்வோடு
அவரின் இறுதி ஊர்வலத்தில்
சுமந்து பாருங்கள்
நிச்சயம் கனமாகத் தான் இருக்கும்

ஆணென்பதாலேயே
அவரை அழக் கூட விட்டதில்லை
நீங்கள்.

- ஹிதாயத்

More articles by ஹிதாயத்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.