1. தாய் தீபாவளி

சிற்றப்பா, பெரியப்பா,
அத்தை, சித்தி, பிள்ளைகள்,
தெருவில் விளையாடும்
ஏழைப் பிள்ளைகள்வரை
பதினைந்து பேருக்குக் குறைவில்லை,

ஒவ்வொரு தீபாவளிக்கும்
பட்டாசும், பக்ஷணமும்
கணக்காகப் பகிர்ந்தவள் அவள்!

திசைகளில் வீடமைத்த
நான்கு குழந்தைகளுக்குள்
தன்னிருப்பை சமமாகப் பகிர
இப்போது முடியவில்லை.

அமைதியாக இருக்கிறார் அம்மா.

அப்பா தான் ஜெயிக்கிறார்
நான்கு சுவர்களிலும்
ஒரே மாதிரி தொங்கும் புகைப்படத்தில்.

எப்போதும் போல,
கணவரின் வெற்றியில்
திருப்தியடைகிறாள்
அம்மா.

---

2. மனப்பிறழ்வின் தெளிவு

எதுவும் முக்கியமில்லை,
எதுவும் முக்கியமில்லாதுமில்லை.

எதுவும் தீதல்ல,
எதுவும் நன்றல்ல.
எதுவும் வெற்றியல்ல,
எதுவும் தோல்வியல்ல.
எதுவும் எதுவுமல்ல,
எதுவும் எதுவுமில்லாதுமில்லை.

இவ்வளவு தெளிவுக்கு
ஒரே பெயர்
மனப்பிறழ்வு.

---

3. கவிதையின் ஆறுதல்

நனைந்த கடலை
கொண்டு வர முடியவில்லை
கொஞ்சம் மணல்
உடன் வந்துவிட்டது.

நினைத்தவளைக்
கூட்டி வர இயலவில்லை
நிறையவே கவிதை
உடன் வந்துவிட்டது.

சில ஆறுதல் பரிசுகள்,
முதல் பரிசை விடவே
மதிப்புடையவையாக,
மறக்க முடியாதவையாக
இருந்து விடுகின்றன.

---

4. நினைவின் ஆதிக்கம்

நான் நினைத்தாலும்
உன்னை மறக்க இயலவில்லை.

என் நினைவகம் முழுவதும்
முழுமையாக நீ வியாபித்திருக்கிறாய்!

உன்னை மறக்க வேண்டும் என்று
நினைப்பதற்கே
இடமில்லை என் நினைவகத்தில்!

---

5. தாயும் குழந்தையும்

விழுந்த குழந்தையின்
உடல் அடிபட்ட இடத்தை
தடவிக் கொடுக்கிறாள் தாய்.

தரையில் விழுந்த இடத்தை
தடவுகிறது குழந்தை!

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.