உன் வாசல் நந்தியாவட்டையென
உச்சிப் பகல் பல்லைக் காட்டிச் சிரிக்கிறது.
மரத்தின் பேரழகை வட்டமாய்
அசையாமல் நிழலாய்
வரைந்து காட்டும் கோடை
அடிமரத்தில் நாக்கில் நீர்ச் சொட்ட
பெருமூச்சு வாங்குகிறது.
வெப்பம் தணிக்க
சாக்கடையில் படுத்து
எழுந்து எங்கேயோ
ஓடுகிறது நாய்.
நொறுக்குத் தீனியாய்
மரங்களைத் தின்று
வளர்ந்து நிற்கும்
நீண்ட கான்கிரீட் சமாதி பாலத்தின்
மேலும் கீழும்
வெள்ளரிப் பழத்தை
கூவி விற்கிறார்கள்
வெயில் பெண்கள்.
இளம்பச்சையாய் வட்ட வட்டமாய்
நறுக்கி விழியில் மொழியில்
உன் நீர்மை வெள்ளரி முத்தங்களை வைத்து
கானல் காதல் தணிக்கிறேன் நான்.

- சதீஷ் குமரன்

Pin It