மழை பெய்து கொண்டிருந்தது
 
சிமெண்ட் பலகையின்
 
காலடித்தடங்களில் தெறித்த
 
நீரோடு சில நிகழ்வுகளும்
 
தெறித்தன
 
உதட்டுவரி பள்ளங்கள் பதிந்த
 
தேநீர் கோப்பையில் இருந்து
 
உதடுகள் வழி பொசுக்கப்பட்டன
 
சில நினைவுகள்
 
பழுப்பேறிப்போன காகிதங்கள்
 
படபடத்ததில் சிதறிப்போயின
 
சில கையெழுத்துகள்
 
கிர்ர்ரென இழுத்து
 
அடிநெஞ்சிலிருந்து துப்பிவிட்டு
 
சாம்பல் கொண்டு
 
மூடவேண்டியதாயிற்று
 
சில நினைவுகளை  

இனிமேல் இந்த 
இடிந்த வீடு பக்கம்
 
மழைக்கு கூட ஒதுங்கக்கூடாது  

எனக்கே தெரியாத என் ரகசியங்கள்

 
என்னிடமே ஒளிந்திருக்கின்றன
 
எனக்கே தெரியாத ரகசியங்கள்
 
கனவில் பார்த்ததெல்லாம்
 
காலையில் மறந்த ரகசியம்
 
படுக்கையை திருப்பிபோட்டதில்
 
மூச்சுத்திணறி இறந்த ரகசியங்கள்
 
காற்று இழுத்து வந்து
 
என் அறையில் போட்டுப்போன
 
பெயர் தெரியாதவனின் தற்கொலை
 
செய்துகொள்ளும் முறைகளின் பட்டியலில்
 
எந்த முறையில் செத்துப்போனான்
 
என்ற ரகசியம்
 
யாருமில்லாத வேளைகளில்
 
என் குரல்மட்டும் வெளியே வந்து

என்னிடமே  எப்படி பேசுகிறது 
என்ற ரகசியம்
 
இப்படி என்னிடமே இருக்கின்றன
 
எனக்கே தெரியாத ரகசியங்கள்
 

- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It