நெருங்கிய ஒருத்தருக்குத்தான்
மெண்டல் எனப்
பெயரிட்டிருக்கிறேன்
இருபது வருட
நண்பன் ஒருவனுக்கு
இனிஷியலே இடியட்தான்
விருதுவெறி
யார் எனத் தெரிந்தால்
விவாதப் பொருளாகும்
குழப்பவாதி
முன்னொரு காலத்து
பெஸ்டி என்றால்
நம்புவீர்களா
ஆன்ராயிடு திறன்பேசி
அடியே அமர்ந்து
ஆப்பிளுக்கு காத்திருக்கும்
நண்பனுக்கு
அடி மாடு என்றே
பெயரிட்டிருக்கிறேன்
சில எண்களை
எடுக்கக் கூடாதென்பதற்கே
சில்லறைகளாக
சேமித்திருக்கிறேன்
புறம் பேச முடியாதபோது
எட்டி உதைக்க முடியாதபோது
கழுத்தறுக்க முடியாதபோது
இப்படித்தான் முடிகிறது
யாருக்குத் தெரியும்
கிறுக்கன் என்றோ
வன்மன் என்றோ
எவராவது சேமித்திருக்கலாம்
என்னையும்...!

- யுத்தன்

Pin It