நெடுஞ்சாலை எங்கும்
மரங்களை வெட்டி வீழ்த்தி
முளைத்து நிற்கின்றது
கருப்பட்டி காபிகள்,
டிகிரி காபிகள்,
பேக்கரிகள், பவன்கள்,
தாபாக்கள், கஃபேக்கள்.
எல்லா இடங்களிலும் சென்று
யார் யாரையோ தேடியலைகிறது
பெருஞ்சாலைகளாளும்
பெரும்பாலங்களாளும்
அத்துமீறி நுழைந்து
அடையாளங்களைச்
சிதைத்தழித்தைக் கண்டு
ஊளையிடும் ஊர்க்காற்று.
குடிக்க ஒரு வாய்
தண்ணீர்த் தராத
பெருநகரில் மனப்பிறழ்வானவன் போல
சுற்றித் திரிகிறது.
பாலத்திற்கடியில்
பனியாரமும் இட்லியும்
சுடும் பாட்டி அருகே சென்று
வாலாட்டி நிற்கிறது பசியுடன்.
வான் நிலவும் வந்து
கையேந்தி நின்றது
பாட்டியிடம்.
கையில் ஒரு குழி பனியாரத்தைப்
பிட்டு வீசுகிறாள்,
மண்ணில் உயிர்ப்புடன்
உருண்டோடுகிறது
மணிமேகலையின் ஈரங்கள்.

- சதீஷ் குமரன்

Pin It