எனக்கு திசைகள்
இருக்கின்றன
உள்ளேயும் என்கிறேன்

*
அருவியின் இரைச்சலை
எழுதி எழுதிப் பார்க்கிறது
ஈர மனப் பாறை

*
கோழி கொன்றோ, ஆடு தின்றோ
தீர்ந்து கொள்கிறது
வார கோபம்

*
சட்டென திரும்பிக் கொண்டேன்
விட்டேனென விரைந்தது
வழி

*
தன்னைத் தானே செதுக்கிக் கொள்பவன்
தன்னைத் தானே உடைத்துக் கொள்ளவும்
நேரிடும் கவனம்

*
குரல் வழியே பகல் செதுக்கும்
பின்கட்டில் இருந்து தான்
தினம் அவிழும் நாளும் வருகிறது

*
படித்துறையில்
அமர்ந்திருக்கிறாள்
கணுக்கால் வரை கண்ணாடி வலை

*
ஒவ்வொரு துள்ளலிலும்
கண்ணாடி பார்த்து கொள்கின்றனவோ
காற்றிலாடும் மீன்கள்

- கவிஜி

Pin It