இந்தப் பேருந்திலும்
நமக்குப் பிடித்த பாடல்
இப்போது ஓட்டுநர் கைகளில்
சுழலுவது என் இதயம்

உனக்கும் எனக்குமான
நிலாக்கள்
எதிர் வரும் பேருந்தின்
முகப்பு வெளிச்சங்களில்

ஒற்றை ஆளுக்கு
எதற்கு இரண்டு டிக்கட்டுகள்
விழிக்கிறார் நடத்துனர்
உன் போலவே நாக்கைக் கடித்து
சிரிக்கிறேன்
நகர்கிறார் நல்லவர்

முதியோருக்கு எழுந்து
இடம் தருகிறேன்
முன் சீட்டில் உன் பால்ய சிரிப்பு
சிறுமிக்கு
பின் சீட்டில் உன் பருவ சிரிப்பு
குமரிக்கு

மருதாணி விரல்கள்
மனதுக்குள் மணக்கிறது
மல்லிகையே மல்லிகையே
பாடல் இப்போது

பின் செல்லும் மரத்தில் எல்லாம்
உன் மந்திர டாட்டாக்கள்
செங்காந்தள் மலர்களிலோ
உன் நேந்திர டப்பாக்கள்

முந்தின ஸ்டாப்பில்
திடும்மென ஏறிய கூட்டத்தில்
அத்தனையும் நீ
பிரேக்கிட்டு வேகமெடுத்த பேருந்துள்
டபக் டபக் கற்பனைக் கண்கள்

வழக்கம் போல ஜன்னலோரம் தான்
அமர்ந்திருக்கிறேன்
சில்லென முகம் பட்டு காது தொட்டு
கழுத்து நுழைவதெல்லாம்
காற்றா என்ன
நம்மோடு நாமிருந்த நம் நேற்றும் தான்

- கவிஜி

Pin It