வாசலில் சிறு மரமோ அல்லது
பூச்செடிகளோ உள்ள வீடுகள்
கொடுத்து வைத்தவைதான்.
யார்யார் முகத்திலோ
முழிப்பதிற்குப் பதிலாக
தேவதைகளின் இசையில்
சிலிர்ப்பூட்டும் உதயம்.
பறவைகளே புள்ளி வைத்து
காத்திருக்கும் எச்சமிட்டு
கோலமென உன் வரவைப் பார்த்தபடி .
ஊர்ந்திடும் வண்டுகளும்
இரவில் இணையோடு
நெகிழ்ந்து நெளியும் புழுக்களும்
வாசலில் மோக அரங்கேற்றம் நிகழ்த்தும்
மூன்றாம் சாம பின்னிரவில்
பின்நவீனம் உடைத்தெறிந்த
நுட்ப ஆடைகளை வீசியபடி
கட்டுக்குலையாத கட்டுடைப்புடன்
நீ எழுதக் குனியும் நேரம்
வாடகை வீட்டில் குடியிருப்பவனுக்கு
வக்கனை என்ன வேண்டிக்கிடக்கு என்றபடியே
குக்கர் சோற்றின் நொசநொசப்பை
உதறியபடி உய்யப் பறக்கும்
அண்டக்காக்கையொன்று வெயிலை விரட்டியபடி
தழைச்சத்து சோற்றுக்காய் சிறகடிக்கும்.

- சதீஷ் குமரன்

Pin It