நினைவில் நிலைத்துவிட்டதவள்
முகம் கொள்ளாது
தளும்பும் புன்னகை.
அந்த கண்ணெனும்
சுடருக்குள் குறும்பு
கொப்பளிக்கும்.
எச்சில் வைத்த பண்டத்தை
அப்படியே ஊட்டிவிடுவாள்
என் பசி அறிந்தால்
தன் பசி மறந்து.
கட்டுரை ஏட்டின்
கடைசி பக்கத்தில்
மாம்பழம், புசுபுசு நாய்க்குட்டி
படங்களைக் கத்தரித்து
எச்சில் தொட்டு ஒட்டிய
அவளைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எதிரே முட்கரண்டியை
நளினமாய் கையாளும்
இவளிடம்!
எச்சில் தொட்டு
இதயத்தில் ஒட்டிக்கிடக்கும்
அவள் அல்ல இவள்!!
என்றாலும் அந்த
மதுரப் பொழுதுகளின்
மயக்கம் போதுமாயிருக்கிறது
இவளை உச்சி முகர்ந்து
கொண்டாட!

- மைதிலி கஸ்தூரிரங்கன், புதுக்கோட்டை

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.