கால் மீது காலிட்டிருந்த போது
காலரில் கஞ்சி போட்ட விடைப்பு
கண்களில் சிமிட்டாத்தனம்
சிவாஜி சாயலை வம்பிழுத்தது
மூச்சையும் அளவாய் விடுதல்
மகத்தானவனுக்கு நகல் போல
அதிரூபத்தை நெற்றிக் கோட்டில்
சீர் செய்தபடியே
உதட்டோரம் வியாபாரப் புன்னகை
பேசிப் பார்த்த தேடி எடுத்த
அடிக் கோடிடல்களை காதுகள்
முணுமுணுத்துப் பார்த்தன
அடுத்து உள்ளே செல்ல வேண்டும்
அச்சுப்பிசகாமல் அமர்ந்து ஆர்டர் பிடிக்க வேண்டும்
இங்கிதமும் இங்கிலீஷும்
இரு பாக்கெட்டுகள் நிரம்ப எழுந்தவனுக்கு
அந்த கதவுக்கு பின்னால் தான்
அம்மாத வீட்டு வாடகை மளிகை சாமான்கள்
31 நாட்களுக்கான நான்கு வயிறுகள் என்று
இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன
ஓட்டை விழுந்த சாக்ஸை
மாற்ற வேண்டும் என்பது உள்பட
இன்னும் இன்னும்....!

- கவிஜி

Pin It