இருளாக இருப்பதே
உங்களுக்கு வெளிச்சம் காண்பிக்கத்தான்
வாழ்தல் என்பது
மரணித்த பிறகுதான்
தொடங்குகிறது ரகசியங்கள்
இறத்தலை அறியவேதான்
மனிதன் பிறக்கிறான்
இருக்கும் ஒன்று பிறக்கவும் இல்லை
மரணிக்கவும் இல்லை
பிறப்பிற்கான வரவேற்பை
ஒன்று தருகிறபோது
இறப்பிற்கான வரவேற்பும்
காத்துக்கொண்டுதான் இருக்கிறது.
சாத்தான் நம் தோழன்
அவன் எப்பொழுதும்
இன்பத்தைத் தருபவன்
ஒரு முறையாவது சாத்தானை
வணங்கிப் பாருங்கள்
அவன் ஓவியத்தை தீட்டியவன்
குணங்களைத் தீட்ட மறந்துவிட்டான்.

உங்கள் முறிந்த சிறகுகளில்
பறவைகளின் மழையில்லாமல்
காலியானது இங்கு மரங்கள்
அங்கு துன்பங்கள் எதுவும் இல்லை
நீண்டதொரு மூச்சுதான்
அங்கு செல்ல வழிகாட்டுகிறது
மூச்சு சங்கிலியைப் பிடித்து
அந்த அழகான இடத்திற்குள் இறங்கி
உடலெனும் கூட்டைத் தகர்த்து எறி
அங்கு ஆன்மாவின்
ஒளியில் சாத்தான் அமர்ந்திருக்கிறான்
அவன் விலக்கப்பட்ட அமிர்தத்தை
கடைந்தூட்டுவான்
இன்பம் துன்பம் என்று
பேசிக் கொண்டிருக்கும்
கடவுளைத் தாண்டி
கடவுளோடு சண்டையிடுவான் நமக்காக
சாத்தான் இன்பத்திற்கு
அதிபதி என்பதால்
கடவுளுக்குப் பிடிப்பதில்லை

ஒரு தாயின் கருவறையைப்போல்
சாத்தானின் பிரபஞ்சம்
ஒன்று காத்திருக்கிறது
அங்கு உணவு மேசையில்
சாத்தான் விருந்தளித்தான்
அங்கு மூன்று டம்ளர்கள் இருக்கிறது
நல்ல உபசரிப்பாளன் அவன்
சாத்தானோடு முதல் தேநீர் எனக்கு
அழகான சிறகைத் தந்தது
சுதந்திரமாக பறக்க கற்றுக் கொடுத்தது
அங்கு அழகான மூடுபனி
அந்த அழகான இரவில்
சாத்தானின் விருந்து இனிமையில்
மூன்றாவது டம்ளர் தேநீர்
சூரியனை விலக்க
காத்துக் கொண்டிருக்கிறது.

- ப.தனஞ்ஜெயன்

Pin It