வீட்டின்
விசாலமான
வரவேற்பறை
கொஞ்சம் கொஞ்சமாய்
சுருங்கத் தொடங்கியது
சுவர்கள் நெருக்கின

அமர்ந்திருந்த
இருக்கைக்கும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
இடையிலான இடைவெளி
குறைந்து நொறுங்க...

தொலைக்காட்சித் திரையில்
முகம் தோய்ந்து
மூச்சு முட்டியது

சுவாசம் வேண்டி
திரையின் உள்ளே
தலை நுழைத்து
காட்சி வெளியில்
மூச்சிழுத்து
இளைப்பாறினேன்

உடல் வெளியேயும்
தலை திரைக்குள்ளும்

ஓயாத பெரும்பேச்சு
செவி கிழிக்கும் ஓசைகள்
வண்ணங்களைக்
குழைத்து அப்பிய
புனைவு அரங்குகள்
ஒப்பனை முகங்களின்
கோரத் தாண்டவம்

திரைவெளியில்
இருந்து மீளும்
அவசரத்தில்
வெடுக்கென தலையிழுக்க…

தலையை இழந்த உடல்
நெருக்கிய பக்கச்சுவர்
நசுக்கும் மேல்தளம்
இடையில் சிக்கி
இருப்பைத் தொலைத்தது.

- மலையருவி

Pin It