எங்கள் வீட்டுக்
குளியலறை ஜன்னலில்
ஒரு தேரை.
சில மாதங்களாக
ஒரே இடத்தில்..

இடம் பெயர்வதில்லை
ஒலி எழுப்புவதில்லை..
ஆனால்
உயிரோடுதான் இருக்கிறது.

எப்பொழுதாவது
கொஞ்சம் இடப்பக்கமோ
கொஞ்சம் வலப்பக்கமோ
அசையும்
உயிரோடுதான் இருக்கிறேன்
என்பதைக் காட்ட

எப்பொழுது உணவு
எப்பொழுது தண்ணீர்
உயிர் வாழ்க்கை எப்படி?
புரியாத புதிர்..

இடி மின்னலோடு
சுழன்றடிக்கும் சூறாவளி
கொட்டும் மழை
கொளுத்தும் வெயில்
எதற்கும்
அசைந்து கொடுக்காத
தேரை..

யார் வாழ்கிறார்
யார் சாகிறார்
பூமி குளிர்கிறதா
தீயில் வேகிறதா
சலனமில்லா
சஞ்சலமில்லா
மோன தவத்தில்
தேரை..

குளியலறையில்
மட்டுமல்ல
வீட்டின்
உள்ளேயும் வெளியேயும்
நகரமெங்கும்
நாற்றிசையிலும்
நாடெங்கிலும்
தேரைகள்..
தேரைகள்..

வாழும் களத்தில்
இருக்கும் இடத்தில்
கண்ணுக்கெதிரே
எது நடந்தாலும்
யாருக்கு நடந்தாலும்
அசைந்து கொடுக்காத
தேரைகள்

புத்தகம் தின்று
பட்டங்கள் செரித்து
மூளை வீங்கிக் கிடக்கும்
தேரைகள்
நாடெங்கிலும்
நடுவீட்டிலும்..

- மலையருவி

Pin It