அப்பாவின் கையெழுத்து
அழகாகவே இருக்கும்,
அவர் வாழ்க்கையைப் போல்
இல்லாமல்...

பள்ளிக்கூடத்திற்கு புத்தகங்கள்
எடுத்துச் செல்ல வேண்டிய வயதில்
ஆடுகளை மேய்த்த வேதனைகள்
அவர் கண்களில் படிந்திருந்தது
மரணமடைந்த நாளிலும்...

சிறு குடிசையில்
உடன்பிறந்தவர்களோடு அப்பா
வாழ்ந்த வாழ்க்கை,
ஆட்டுக்குட்டிகளின் மந்தையை
நினைவுபடுத்தும்

ஆறடி உயரம் என்றாலும்
கம்பீரங்கள் களவாடப்பட்டிருக்கும்,
தன் உடன் பிறந்தவர்களுக்காய்
உழைத்த உழைப்பினில்

மணம் முடித்த பின்னும்
மணமுடையாமல்
உடன் பிறந்த குடும்பத்தையும்,
தன் குடும்பத்தையும்
கரையேற்றியதில் கொஞ்சம்
தள்ளாடிப் போயிருந்தது...
அப்பாவின் மனது 

எங்களை விட்டுப் பிரிந்து
பத்து வருடங்கள் கடந்தாலும்
கடக்க முடியாமல் போகும்
உயிர் வலியோடு,
சிறு குழந்தையாய் இருந்த
எங்களுக்கான உழைப்புகள்!

- மு.முபாரக்

 

Pin It