வீடு திரும்புங்கள்.
வீட்டிலேயே இருங்கள் என்கிறார்
தேசத்தின் அதிபர்.

வீடற்றவர்கள்
எங்கே திரும்பிச் செல்வது?
என்று அதிபருக்கும் தெரியவில்லை.

தெருவையே இவ்வளவு காலம்
வீடாக நினைத்துக் கொண்டவர்கள்
பூமிக்கு அடியில் செல்வதைத்தவிர
வேறு வழி தெரியவில்லை.

கருணைமிக்க அரசாங்கம்
ஏதுமற்ற ஏழைகள்
கூட்டம் கூட்டமாக
அகதிகளாக்கப் பட்டது குறித்து
கொஞ்சமும் கவலைப்படவில்லை.

அவர்களின் குழந்தைகள்
பசிக்கொடுமை தாங்காமல்
புற்களைத் தின்பது குறித்து
யாரும் வெட்கமுறவில்லை.

மக்களைக் காப்பதற்காக
துணை ராணுவம்
களத்தில் இறங்குவது,
தொலைக்காட்சியில்
இராமாயணத் தொடர்
மறு ஒளிபரப்பு ஆவது என
அரசு தீவிரமாக
செயலாற்றி வருகிறது.

உண்மையில்
மக்களைக் கொல்லும்
கிருமி என்று
தன்னை மட்டுமே
சொல்வதன் பழியை
கொரோனாவே
ஏற்க மறுக்கிறது.

- அமீர் அப்பாஸ்

Pin It