கிழக்கு மேற்கை ஒன்றாக்க
ஒரு வியாதி
தேவைப் படுகிறது

எல்லாரும் பொதுவென சொல்ல
ஒரு கிருமியின் குதியாட்டம்
தேவையாயிருக்கிறது

ஓவர் ஆட்டம் மனிதா எனச் சொல்லி
ஒரு நுண்ணுயிரி
தலை சிலுப்புகிறது

எல்லா சாதியும் சாகுமென சிரிக்கும் கிருமி
சாத்திரம் அறியாது
சமஸ்கிருதமும் அறியாது

சுத்தம் சோறு போடும் என்றவன்
எத்தனை உயர்ந்தவன்
சித்தன் சொன்னதெல்லாம்
விட்டொழித்ததற்கு தலையிலடி

கூனிக் குறுகியவன் மீசை முறுக்கியவன்
அருவாள் தூக்கியவன் அதிகாரம் ஆக்கியவன்
யாதுமறியா பராபரம் கொரோனா

எல்லாக் கடவுள்களும்
கடை சாத்தி விட்டார்கள்
எல்லா மனிதர்களும்
விழித்துக் கொள்ளும் நேரம் இது

தலைக்கு மேல் இருந்து இறங்காது
காக்கும் தெய்வம்
நம்மில் நாமே நம்பு

காலம் முழுக்க கற்றுணர்ந்ததை
செயல்படுத்தும் காலம் வந்தே விட்டது
அச்சமின்றி திட்டம் போடு

மறைந்திருந்து தாக்குதலும்
போர்த் தந்திரம் தான்
மரபணுக்கு சொல்லிக் கொடு

செவ்வாய் நிலவுக்கு
ராக்கெட் விடும் மானுடமே
இந்த ஒவ்வாமைக்கு மருந்து செய்

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
ஆனாலும் விழுமிடத்திலிருந்து
நகர்ந்து கொள்தல் நலம்

தனித்திரு தனித்திரு தனித்தே இரு
தவம் போல இருக்கட்டும்
தான் என்ற ஞாபகம்

உடம்பை வளர்ந்தேன் உயிர் வளர்ந்தேன்
திருமூலர் சொன்னது தான்
உற்றுநோக்கு உடம்பை
உயிரைப் பேணு மனிதா

- கவிஜி

Pin It