மஞ்சள் பேக்ரவுண்டில்
போல்ட் செய்த
ஏரியல் ஃபாண்டில்
நான்கு வரிக்கு ஓர் இடைவெளி

இரண்டு பத்தி தாண்டியதும்
மூன்று வரிக்கு ஓரிடத்தில்
பாதி வரிக்குக் கூட இடைவெளிவிட்டு
இரண்டு கமாக்களும்
ஒரு அரைக்காற்புள்ளியும்

கண்டன்ட்டின் மீதியை அடுத்த பத்தி
ஆரம்பித்து
ஆச்சரியக் குறியை இழுத்து விட்டு
அடுத்த வரியை மறக்காமல்
மூன்று புள்ளிகளிட்டு முடிக்கிறீர்கள்

அப்படி இப்படி கோடிட்டு
மாடர்ன் ஆர்ட் வேறு எதிர்ப் பக்கம் முழுக்க
இணை சேராத இரு சொற்களை இட்டு
தலைப்பாக்கி இலக்கிய மிரட்டலும்
அரங்கேறுகிறது

எண்ணுவதெல்லாம் உயர்ந்தது போல
நீங்கள் எழுதுவதெல்லாம்
கவிதையாக்கிக் கொண்டிருக்கின்றன
வியாபார காந்த வார இதழ்கள்....

- கவிஜி

Pin It