பேய்மகன் ஆணையிடுகிறான்
புதிய புதிய பிணங்கள் வேண்டுமென்று
எரியும் அடுப்புகளில் பிடுங்கிய எலும்புகளால்
நிலவுக்கு ஏணி சமைக்க வேண்டும்.
கபால எலும்புகளை
எல்லைப்புற வேலிகளுக்காக
ஒதுக்கி விடுங்கள்.
பனைமர நிழலில் விறகுக்குப் பதிலாக
காய்ந்த நுங்குகள் பொறுக்கும்
மகளிர் செல்லும் பாதையில்
திறந்து விடப்படுகிறது விஷவாயு
பற்றியெறியும் கூரைகளை அணைக்க முடியாமல்
சொட்டிக் கொண்டிருக்கிறது நெஞ்சுக்குருதி.
கல்வெட்டுகளை உடைத்தபின்பு
உருட்டி விடப்படும் பாறைகளால்
நசுங்குகின்றன பள்ளத்தாக்குக் குடிசைகள்
பனையோலைகளை எரித்து
நூலகங்களைக் கொளுத்தி விடுங்கள்
எங்குமே இருக்கக்கூடாது
பிணங்களின் எண்ணிக்கைப் பதிவு.
அணுஉலைகளின் பெருமூச்சை
அவிழ்த்து விடுங்கள்
எரியும் உடல்களை கடற்கரையில் வையுங்கள்
உப்புப் பற்றாக்குறை எழப்போவதில்லை.
குழந்தைகளுக்காக அழக்கூடாது
முதுகுப்பக்கத்தில் சுடுவதற்கு
அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இசை
புரட்சி பாட ஆரம்பிக்கும்போது
வல்லுறவால் நரம்புகளை அறுத்தெறியுங்கள்
எந்தப் பிணத்திற்கும் நாவிருக்கக் கூடாது.
ஆயுதங்கள் உற்பத்தி ஆலையில்
குறியீடு இறங்கினால்
இன்னும் அதிகமாக
புதிய புதிய பிணங்கள் வேண்டும் என்ற
பேய்மகன்
எரிபொருள் சேமிப்பிற்காக
பூமியின் அடிவயிற்று நெருப்பிலிருந்து
நேரடியாகக் கொள்ளிவைக்க
ஒரு தொப்பூள்க்கொடியை
தயார் செய்யும்படி
விஞ்ஞானிகளை
ஊக்கப்படுத்திவிட்டு
துயிலச் செல்கிறான்.

- இரா.கவியரசு

Pin It