பிஞ்சு புளியங்காய்
செங்காய்
புளியம்பழம்
அருநெல்லி
பெருநெல்லி
மாங்காய்
மாம்பிஞ்சு
கொடுக்காப்புலி
ஈச்சங்காய்
ஈச்சம்பழம்
இலந்தைப்பழம்
நாவல் பழம்
எதை பறித்துக் கொடுத்தாலும்,
திருட்டுத்தனமாய் கல்லால்
அடித்துத் தந்தாலும்,
எனக்குக் கூலியாய்
முழுசாய் நீ தந்ததில்லை.
உன் பாவாடையில் மடித்து
காக்கா கடி கடித்தே
செம்பாதியாய் தருவாய்.
ஒருவாய் பழத்தின் வாசமும்
பாவாடையின் வாசமும்
பள்ளிப்பாடங்களை உச்சமாய்
இனிக்கச் செய்யும்.
இப்போது கோடையும் வந்துவிட்டது
கனிகளும்தான்..
ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டே
காக்கா கடி என்றால் என்னவென்று கேட்கும்
மகளிடம்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
செல்லமாய்
ஒரு காக்கா கடியைத் தவிர...
கோடையும் கடந்து போனது
கடந்து போகுமோ யாவும் ஒரு கோடையாக..!

- சதீஷ் குமரன்

Pin It