கருத்து விதைப்போர் கழுத்தை அறுக்குது
காவி உடுத்திய கூட்டம்-வெறி
கூடியே போடுது ஆட்டம்-பகை
நெருப்பை வளர்த்து ஜனநா யகத்தை
நசுக்கிடக் கொள்ளுது நாட்டம்-நம்
நாக்கு களையது பூட்டும்

சிந்தனை செய்வோர் சிரசை எடுக்குது
சங்பரி வாரமின் நாட்டில்-மநு
தருமம் படிக்குது ஏட்டில்-அன்று
நந்தனைச் சுட்ட நெருப்பினில் ஊற்றுது
நெய்யினைப் போகிற போக்கில்-சமுக
நீதியைப் போடுது தூக்கில்

எல்லா மலர்களும் காவி நிறத்தினில்
எப்படிப் பூக்கும் உலகில்?-நிறங்களை
எண்ணுவ தெப்படிப் பூவில்?-சாதி
பல்லாக் கினைமக்கள் தோள்களில் ஏற்றிப்
பவனி வருதுமநு நீதி-தன்
பாசிஸ பற்களை நீட்டி

கடலைப் பறந்து கடக்கும் குரங்கின்
கதையினை நம்பிடச் சொல்லும்-எதிர்த்துக்
கேட்கிற பேர்களைக் கொல்லும்-மனித
உடலைத் தொடுவது தீட்டெனச் சொல்லி
உழைக்கிற மக்களைத் தள்ளும்-தமது
உதிரம் உயர்வென எண்ணும்

தீண்டா நிலையைத் தினமும் வளர்க்குது
தீமைகள் செய்திடும் காவி-பல
சாஸ்திரப் பொய்களைக் கூறி-ஒரு
ஆண்டாள் கதையினை சூத்திரன் சொன்னால்
அலரித் துடிக்குது காவி-நெஞ்சம்
அக்கினிக் குழம்புக ளாகி

அய்யன் திருவடி தீண்டுதல் தீட்டென
‘'அன்பாய்’ அடக்குது பெண்ணை-காவி
அசிங்கப் படுத்துது மண்ணை-இந்தப்
பொய்யர் கருத்தினை மெச்சிச் சிலரும்
புகழ்ந்துரைக் கின்றனர் அய்யோ!-உலகில்
பகுத்தறி வென்பது பொய்யோ

பத்துத் தலையுடன் தோன்றிய ராவணன்
படுகளம் தன்னில் இறந்தான்-ராமனின்
பாணங்கள் தைத்திட மடிந்தான்-எனப்
பித்துப் பிடித்தவர் சொன்ன கதைகளை
பாமர மக்களும் ஏற்றார்-அதைப்
பாடியும் வைத்தனர் பாட்டால்

பாபரின் பள்ளியில் ராமன் பிறந்ததாய்
பைத்தியக் காரர் உரைத்தார்.-பள்ளியை
பாசிஸ மூடர் உடைத்தார்-பரி
தாபமாய் செத்தனர் ஆயிரம் ஆயிரம்
சாமா னியமா னவர்தான்-அந்தச்
சண்டையில் வென்றான் மநுதான்

சகிப்பை வளர்த்து சமயம் விடுத்திட
தேசம் நலம்பெறும் உண்மை-நம்
தேசத்தின் ஜீவனே பன்மை-மழை
முகிலாய்ப் பொழிந்திடு அன்பைப் பிறர்மேல்
முளைத்திடு மேஅதில் சொர்க்கம்-அதுவே
மனிதனாய் வாழ்வதன் அர்த்தம்

- மனோந்திரா

 

 

 

 

 

 

 

 

Pin It