இன்னும் லீவு கிடைக்கல...
காலையில் இருந்து திரும்ப திரும்ப
கேட்டுக்கொண்டே இருந்தது அவன் குரல்...
ஏழுமணி பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
இன்னும் சற்று வியர்த்து ஒட்டிக்கொள்ளும் சட்டையை
அவனைப்போல ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டாவது இருக்கைக்கும், ஆறாவது இருக்கைக்குமான
உரையாடலை நிச்சயம் ரசித்திருப்பான்
படம் தெரியாத பாட்டுக்கும் இசைந்திருப்பான்
நாளைக்கு வாங்கிக்கலாம்பா சில்லரையை
என்ற நடத்துனரிடம்
சரியண்னே என சிரிப்புடன் நகர்ந்திருப்பான்
இரண்டு சிறுகீரைக் கட்டுடன்
பையை மடியில் வைத்து சிரிக்கும் பாட்டிக்கு
இடம் தந்துவிட்டு பேரனை விசாரித்திருப்பான்
அடுத்த திருப்பத்தில் வரப்போகும்
அரசமர பிள்ளையாருக்காய் காத்திருந்திருப்பான்
சன்னல் சாய்ந்தபடி
இரண்டு பக்கமும் அடர்த்தியாய்
அன்பைக் கொட்டும் மரங்களை
வாஞ்சையுடன் கடந்து இருப்பான்....
ஆறேழு மாதத்திற்க்கு ஒரு முறை
வந்து போகும் அவனுக்காகத்தான்
அவன் தெருவின் அத்திமரம் காத்திருப்பது
அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்
சிறு நெல்லி மிதக்கும் கிணற்று நீரை
முகர்ந்து கொண்டே குடித்து
சிலாகிக்க அவனைத்தவிர
வேறு யாரால் முடியும்
ஊர்திரும்பிய நாட்களில்
முற்பகலையும்
பின்னிரவுகளையும் மெதுவாய் நகர்த்தியிருப்பான்
கிட்டத்தட்ட எல்லோரையும் விசாரித்திருப்பான்
கொஞ்சம் தையல்விட்டுப்போன அந்த நீலசட்டையில்
மொத்த வீதியையும் நடந்து சலித்திருப்பான்
அப்பா தரும் நெய்முறுக்கிலும்
அம்மா சுட்டுத் தரும் தோசையிலும்
உலகம் தொலைத்திருப்பான்....
கடைசி ஸ்டாப்பல்லாம் இறங்குங்கப்பா..
கரைந்த குரலில் சற்று கலைந்து போனேன்
இறுக்கி மூடிய கைக்குள்
இருந்த பயணச்சீட்டை
வீச ஏனோ மனமில்லை
அந்த பாசக்கார ஊர்க்காரனைப்போல....

- இந்து

Pin It