பின்னோக்கியும் முன்னோக்கியும்
நகரக்கூடிய நினைவுகள்
நிஜங்களுக்கும் கற்பனைக்கும்
நடுவே நிழலின்றித்
தவித்துக் கொண்டிருக்கிறன..
முந்தைய நாட்களின் சுவடுகளைப்
பின்தொடர்ந்து நடந்தால்
என்றேனும் மீண்டும்
தொலைந்து போய்விடக்கூடும்
கனவென்று கடந்துவிட்டிருந்த
சில பொழுதுகளுக்குள்..

நிஜம் தேடியலையும் நிழல்
முன்பு தனக்கென்றோர்
உருவம் இருந்ததை
நினைவுகூற முயன்று முயன்று
தோற்றுக்கொண்டிருந்தது..
வார்த்தைகளுக்குள் அர்த்தங்களை
ஒளித்து வைப்பதில்
இனியொரு விருப்பமில்லை..
நிஜம் இங்குண்டு..
அதைத் தேடியலைய மனமில்லை..

நேற்றைய சுவடுகளும்
நாளைய தொலைவுகளும்
வெற்றுக் கற்பனைக்குள்
முடங்கிப் போய்விடுவதில்லை..
தனித்து விடப்பட்ட
கோடிட்ட இடங்களுள்
சிலவற்றை நிரப்பிவிட
சில முற்றுப்புள்ளிகள்
நீண்ட காலமாய்
முயன்று கொண்டிருக்கின்றன..

முடிவென்று ஒன்று
இல்லாத சில தொடக்கங்களைக்
கையோடு சுமந்துகொண்டு
தொடங்கிய இடம்
அறியாத முடிவுகளைத்
துரத்திக்கொண்டிருக்கிறேன்..
எத்திசையில் விடியல்
என்ற நிலையைக் கடந்துவிட்டு
எதிர்த்திசையில் படர்ந்திருக்கும்
இருளுக்குப் பழகிக்கொண்டேன்..
வெற்று மௌனங்களுக்கென்றொரு
ஒலியுண்டு.. அது
கண்களுக்குப் புலப்படுவதில்லை..

கனவுகளை
ஒன்றன் மீது ஒன்றாய்
அடுக்கி வைத்து
அழகு பார்த்துக்கொண்டிருந்த
கற்பனைகளை
முழுவதுமாய்க் களைந்துவிட்டு
சுற்றிக்கிடக்கும் வெறுமைகளை
ஓசைகளிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய்
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்..
கற்பனைக்கும் புலப்படாத
ஏதோ ஒன்று இருக்குமாயின்
அது நிஜம் மட்டுமே..

- கிருத்திகா தாஸ்

Pin It