உங்கள் ஆடைகளில் மறைய
வெற்றுக்குறிகளோடு
திரிபவர்கள் அல்ல நாங்கள்

காமத்தை காமம் என்றே சொல்லும்
எங்களை ஊருக்கு
ஒருத்தியாக காண்பீர்கள்

எல்லா நிறத்தையும்
அள்ளிப் பூசி விட்டு
கருப்பு வெள்ளையில்
முலை வரைபவர்கள் நாங்கள்

முகம் எதுவென எவருக்கும்
தெரியாது
எங்களுக்கும் தெரியாது

வடிவம் மாறி தொங்கும்
யோனியில் சின்னச்சிறு
சிரைக்காத வயது அவ்வப்போது தோன்றும்

யாரிடமும் அதிகம் பேசுவதில்லை
மது நிறைந்த சனிக்கிழமைகளில்
கொஞ்சம் உளறுவது உண்டு

பசிக்கும் ருசிக்கும் இடையே
யோனிப்பைகள் நிரம்பிய
வண்ணங்களை பட்டாம் பூச்சிகளாய்
கற்பனை செய்வது இடைவேளை

பிறகெப்போதாவது படுவேகமான
தடக் தடக்கோடு
காதுக்குள் காதல் கூறுபவனைக்
காண்கையில்
படக்கென்று பாதிக் காசு போதும்
என்போம்

மீதிக்காசுக்கு காதல் வாங்கிய
திருப்தி...

- கவிஜி

Pin It