போயென்று சொல்லி விட்டீர்
சரி போகிறேன்.
நீ வராத பாதையென ஒன்றை மட்டும்
என் கண்ணில் காட்டு
அது போதும்.

போயென்று சொல்லிய வாய்கள்
திசை அளந்து காட்டப் போகின்றனவா?
வாயென்று அழைத்த வாய்கள்
போயென்று சொல்லித்தான் ஆகவேண்டுமா?

வாழ்த்திய சொற்களை எந்தக் குழியில்
போட்டுப் புதைத்தீர்?
புகழ வாயெடுத்த வாய்கள் -இன்று
பேய்யென வசை பாடுகின்றதேன்?

உறவென அருகழைத்த வாய்கள்
உமிழ்ந்து ஆனந்தம் கொள்வதேன்?
எல்லாம் இருந்தவரை தானோ?
இருந்தவரை புகழ்மூட்டம் போட்டு
பிடுங்கித் தின்றீரே? ஐயா -இன்று
கரைந்து போன பின்னே இடக்காலால்
எட்டி உதைப்பதை வழக்காக்கி விட்டீரோ?

நரையேறும் காலம் உமக்கும் உண்டு உண்டு
நெடுமுதுகும் கூன்விழும் காலம் வரும் வரும்
இடுகாட்டின் பாதை உமக்கும் உண்டு உண்டு
சுட்டவித்த பின்னே உனக்கென்ன இங்கே? இங்கே?

வந்தவழி தெரிந்தால் வேறெந்த வழிபோவாய்?
வந்தவழி மறந்த பின்னே சொந்தவழி
எதுவென தேடிச் செல்கிறேன்? -அந்தவழி
எதுவென தேடி நீயும் ஓர்நாள் வருவாய்.

போயென்று சொல்லி விட்டீர்
சரி போகிறேன்.
சொந்தவழி தேடியே.

- இல.பிரகாசம்

Pin It