விதவிதமாய்
உன் சித்திரங்கள் வரைந்து
மாட்டி வைத்திருக்கிறேன்
என் மன அறையில்.

எனை அறைந்த
உன் சொற்கள்தான்
ஆணியாய்த் தாங்கி நிற்கிறது.

நீ மென்சொற்களை உதிர்க்கும்
ஒவ்வொரு முறைக்கும்
சுவற்றில் அழுந்தப் பதிந்த
ஆணியின் பிடி படிப்படியாகத் தளர்ந்து
ஒவ்வொரு படமாய்
கீழே விழுந்து நொறுங்குகிறது.

அப்போதெல்லாம்
எவ்வித அங்கீகரிப்போ
நிராகரிப்போ இன்றி
உடைந்து கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகள் மீது
ஒரு இசையாகப் பயணித்தே கிடக்கிறது
உனை வரமாகப் பெற்ற
என் மன அறை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It