forest 326

இடி முழக்கம் மின்னல் என
இசை கவிய
தாலாட்டும் சுரத்தில்
உரத்து ஒலிக்கிறது
குளிர்மிகு கீதமாய் வானப் பாடல்

தாய்ப்புலம் சேர்ந்த மகிழ்வில்
மடி சுரக்க மார்பு திறந்து
பச்சைப் பாலூட்டும் மழை

மண் செழிக்க
நீர் விதை நடும் பிரியத்தில்
வழிந்தோடும் அருவிகள்

பூமியை பூக்களால் வணங்கி
வேர் தரித்து நிற்கும்
விருட்சங்கள்
பச்சிலைகளின் கூட்டுப் பிரார்த்தனைகளால்
நிழல் சொரியும் காடு

அறியாமையின்
முதுகு சொறிந்தபடி
பணம் புரட்டும் பசப்பில்
இயற்கையின் கால்களை
வெட்டிச் சாய்த்து

கைத்தடியுடன்
நா வறட்சியாய் நான்
வேட்டைப் பற்களால்
மரங்களுக்குச் செய்த பாவத்துடன்
கோடாரிக் காம்பாய் நின்றபோது

காற்றில் வெடித்த சிறு வித்து
கை கோர்த்து என்னை
அழைத்துச் செல்கிறது
வாழ்வின் உயிர்ப்பின் பால்!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It