விடுமுறையைத் தூக்கத்தால் கொண்டாட
ஒருநாள் தான் அனுமதிப்பாள் அம்மா
பாயும் தலையணையும் தூங்கிக் கொள்ளட்டுமென
சிலநேரம் பூட்டப்படும் படுக்கையறை

எழுந்து மலரும் பகலைச் சூடிக்கொள்ளாதவர்கள்
வெளிச்சத்தின் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறார்கள்
பகல் தூக்கம் போடாத அம்மா
மாத்திரை போடுவதே இல்லை
பூத்துக் கனிந்து விதையுதிர்த்த
பசுமை வற்றிய தாத்தாவை
குறையேதும் சொல்வதில்லை
“கட்டைய கொஞ்சம் சாச்சிக்கிறேன்” என
தினம் தினம் தூங்குவதை

பகல் தூக்கம்
வாழ்வைச் சுருக்குமென
அம்மாவுக்குச் சொன்னவர்
இந்நேரம் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்
வீட்டில் உள் நுழைந்து
படுத்துக் கிடப்பவரை
வேவு பார்க்கும் பகல் குறித்து
எதற்காக பயப்படுகிறாள் அம்மா

சின்ன சின்ன வேலைகளின்றி
ஒரு புத்தகத்தையாவது புரட்டிக்கொண்டிருந்தால்
பகலின் சிறகு நம்மை உரசிவிட்டுப் போகலாம்
பகலிலும் இரவிலும்
வாழ்தலுக்கான தனித்துவத்தை
ஒற்றைத்தனமாய்ப் புரிந்து வைத்திருக்கிறோம்
விடியலின் முற்றிய இலைகள் மிதிபட
அதிகாலைப் பொழுதில் வெளியேறிய அப்பா
பகலைச் சாறு பிழிந்த
பகல் அப்பாவை சாறு பிழிந்த
பிசுப்பிசுப்போடு வீடு நுழைவார்

அப்பா வீடு நுழையும்
முன் இராத்திரியில்தான்
அம்மாவின் மேல் பொழுது சாயத் தொடங்கும்

- முனைவர். அகவி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாடாலூர் அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்

Pin It